போலீசார் வாகன சோதனை 224 பேர் மீது வழக்குப் பதிவு
புதுச்சேரி: புதுச்சேரி முழுதும் போலீசார் நேற்று முன்தினம் இரவு சிறப்பு வாகன சோதனையில் ஈடுபட்டு பல்வேறு போக்குவரத்து வீதி மீறல்களுக்காக 224 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். சாலை பாதுகாப்பை மேம்படுத்தவும், போக்குவரத்து விதிமுறைகளை உறுதிப்படுத்தவும், போலீசார் மாவட்டம் முழுதும் நேற்று முன்தினம் இரவு சிறப்பு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அதில், ஒரே வாகனத்தில் 3 பேர் பயணம் செய்த 33 வழக்குகள், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 26 வழக்குகள், மொபைல் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டிய ஒரு வழக்கு, மதுபோதையில் வாகனம் ஓட்டிய 12 வழக்குகள், சரியாக பார்க்கிங் செய்யாதது, சிக்னல் ஜம்ப் செய்தது, உரிமம், வாகன ஆவணங்கள் இல்லாமல் வாகனம் ஓட்டியது உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்களுக்காக 141 வழக்குகள் என மொத்தம் 224 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.போக்குவரத்து விதிகள் வெறும் ஆலோசனைகள் அல்ல, மாறாக நமது சாலைகளில் உள்ள ஒவ்வொரு தனிநபரின் பாதுகாப்பிற்கும் முக்கியமான வழிகாட்டுதல்கள் என்ற செய்தியை வலுப்படுத்த இந்த சிறப்புச் சோதனை நடத்தப்பட்டது. புதுச்சேரி மாவட்ட போலீசார் அனைத்து குடிமக்களையும் போக்குவரத்து விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். பைக் ஓட்டும்போது ஹெல்மெட் அணிய வேண்டும். மூவர் பயணம் செய்வதைத் தவிர்க்கவும், வாகனம் ஓட்டும்போது மொபைல் பயன்படுத்த வேண்டாம். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்க வேண்டும். அனைத்து தேவையான வாகன ஆவணங்கள் மற்றும் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும். இதுபோன்ற அமலாக்கச் சோதனைகள் தொடர்ந்து புதுச்சேரியில் நடத்தப்படும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.