புதுச்சேரி:அ.தி.மு.க., வேட்பாளர் வெற்றி பெற்றால் ஆட்சி மாற்றம் வரும் என
தமிழக அமைச்சர்கள் பேசினர். இந்திரா நகர் தொகுதி அ.தி.மு.க., செயல்வீரர்கள்
கூட்டத்தில் அ.தி.மு.க., அமைப் புச் செயலாளர் செம்மலை எம்.பி.,
பேசும்போது, 'ஜெ., தேர்தல் பிரசாரத்தின் போது ரங்கசாமி முதல்வர் வேட்பாளர்
என்று அறிவித்ததால்தான், மக்கள் அவருக்கு ஆதரவு கொடுத்தார்கள்.
அ.தி.மு.க.,வினரின் உழைப்பை உறிஞ்சிக் கொண்டு ரங்கசாமி ஆட்சிக்கு
வந்துவிட்டார். தமிழக தேர்தலில் காமராஜரை வியூகம் அமைத்து, அண்ணா
தோல்வியடைய செய்தார். முயலை ஆமை வெல்வது போல், நாம் இந்த தேர்தலில் வெற்றி
பெற முடியும். நம்முடைய வேட்பாளர் வெற்றியின் மூலம் புதுச்சேரியில் ஆட்சி
மாற்றம் ஏற்படும்' என்றார். சண்முகம்: கூட்டத்தில் தமிழக பள்ளிக் கல்வித்
துறை அமைச்சர் சண்முகம் பேசும்போது, 'திண்டுக்கல் இடைத் தேர்தலில்
அ.தி.மு.க., முதன் முதலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதன் மூலம் தமிழகத்தில்
திருப்பு முனை ஏற்பட்டது. அதுபோல் தற்போது இந்திராநகர் தொகுதியில்
நடைபெறும் இடைத்தேர்தலில் அ.தி.மு.க.,வெற்றி பெறுவதன் மூலம் புதுச்சேரியில்
அ.தி.மு.க.,விற்கு திருப்பு முனை ஏற்படும். இந்த தொகுதியில்
அ.தி.மு.க.,வெற்றி பெற்றுவிட்டால், அடுத்து புதுச்சேரியில் அ.தி.மு.க.,
சார்பில் புதிய முதல்வர் தேர்வு செய்யப்படுவார். ஜெ.,யாரை கை காட்டுகிறாரோ
அவர்தான் முதல்வராக வருவார்' என்றார்.சம்பத்: தமிழக அமைச்சர்
எம்.சி.சம்பத் பேசும்போது, 'ரங்கசாமி செய்த இடையூறால் தேர்தல் நடக்கிறது.
இதனால் மக்கள் வரிப்பணம் வீணாகிறது. இதற்கு ரங்கசாமிதான் காரணம். ஜெ.,அதிக
பாசம் வைத்து ரங்கசாமிதான் முதல்வர் வேட்பாளர் என்று அறிவித்ததால்தான்
அவரால் முதல்வராக வெற்றி பெற முடிந்தது. ஆனால் வெற்றி பெற்ற பிறகு
ஜெ.,விற்கு துரோகம் இழைத்துவிட்டார். இந்த தேர்தல் தர்மத்திற்கும்,
அதர்மத்திற்கும், நியாயத்திற்கும், அநியாயத்திற்கும் இடையே நடக்கும்
தேர்தலாகும்' என்றார்.அக்ரி கிருஷ்ணமூர்த்தி: அமைச்சர் அக்ரி
கிருஷ்ணமூர்த்தி பேசும்போது, 'ஜெ.,விற்கு துரோகம் செய்து ஜெயித்தவர்
ரங்கசாமி. தேர்தலில் ஜெ., ஆதரவு கொடுத்ததால்தான் ரங்கசாமி கட்சி ஆட்சியை
பிடித்தது. அ.தி.மு.க., வேட்பாளர் பாஸ்கர் வெற்றி பெற்றால் புதுச்சேரியில்
ஆட்சி மாற்றம் ஏற்படும். ரங்கசாமி தலைமையிலான மைனாரிட்டி அரசில் நாள்தோறும்
கொலை, கொள்ளை நடைபெற்று வருகின்றது' என்றார்.