உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / எஜமான் விசுவாசத்தில்வாலிபரை குதறியது நாய்

எஜமான் விசுவாசத்தில்வாலிபரை குதறியது நாய்

புதுச்சேரி: எஜமானனைக் காப்பாற்றுவதற்காக, வாலிபர் ஒருவரை நாய் கடித்துக் குதறியது. இதில், நாய் மீது நடவடிக்கை எடுக்க முடியாததால், உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட வினோதம் அரங்கேறியது.புதுச்சேரி சோலை நகர், கண்ணதாசன் வீதியைச் சேர்ந்தவர் வரதராஜன்; எலக்ட்ரீஷியன். இவர் நேற்று முன்தினம் காலை, முத்தியால்பேட்டை செந்தாமரை நகர் இந்திராகாந்தி வீதியில் உள்ள ஒரு வீட்டில், ஒயரிங் வேலை செய்தார். பின், மாலையில் பணம் வாங்க அங்கு சென்றார்.அப்போது வீடு பூட்டிக் கிடந்தது. இதுகுறித்து, மாடியில் குடியிருந்தவர்களிடம், 'கீழ் வீட்டில் உள்ளவர்கள் எங்கே போனார்கள்' என்று சத்தம் போட்டுள்ளார். அந்த சத்தத்தைக் கேட்டதும், மேல் மாடியில் வசிக்கும் கார் டிரைவர் கிருஷ்ணமூர்த்தி வளர்க்கும் நாய், வேகமாக கீழே இறங்கி ஓடி வந்தது.இதைக் கண்ட வரதராஜன் கோபத்துடன், 'நாயை கட்டிப் போட்டு வளர்க்கலாமே.. ஏன் இப்படி வெளியே விடுகின்றீர்கள்; கடித்து விட்டால் என்ன செய்வது' என்று கிருஷ்ணமூர்த்தியைக் கண்டித்தார். அதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கிருஷ்ணமூர்த்தி, வரதராஜனைத் தாக்கினார். பின்னர் இருவருக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இவற்றைப் பார்த்த கிருஷ்ணமூர்த்தியின் நாய், எஜமானர் விசுவாசத்தில், வரதராஜன் மீது பாய்ந்து கடித்துக் குதறியது.வலியில் அலறித் துடித்த வரதராஜன் ரத்தம் சொட்டச் சொட்ட நாய் மீதும், உரிமையாளர் மீதும், முத்தியால்பேட்டை போலீசில் புகார் செய்தார். சப்- இன்ஸ்பெக்டர் துக்கான் விசாரணை நடத்தினார். வாலிபரை கடித்துக் குதறிய நாயை கைது செய்ய முடியாது; அதற்கு சட்டத்தில் இடமில்லை என்று கைவிரித்த போலீசார், நாயை கட்டுப்படுத்தாத உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி மீது வழக்கு பதிவு செய்தனர். பின்னர், வரதராஜனை சிகிச்சைக்காக, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி