| ADDED : ஜன 15, 2024 06:43 AM
புதுச்சேரி: சம்பளம் வழங்காததை கண்டித்து, வெறும் பானையில் பொங்கல் வைத்து ஏ.ஐ.டி.யு.சி., தொழிற்சங்கத்தினர் நுாதன போராட்டம் நடத்தினர்.புதுச்சேரியில் அரசு சார்பு நிறுவனங்களான பாப்ஸ்கோ, பாசிக் உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. சம்பளம் வழங்க கோரியும், அரசு சார்பு நிறுவனங்களை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர கோரி ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்த நிலையில் அரசு சார்பு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்காததைக் கண்டித்து, ஏ.ஐ.டி.யு.சி., பாப்ஸ்கோ, பாசிக், தொழிற்சங்கத்தினர் இ.சி.ஆர்., ராஜிவ் சிக்னல் அருகே ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில், வெறும் பானையில் பொங்கல் வைத்து நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏ.ஐ.டி.யு.சி., மாநில பொதுச் செயலாளர் சேதுசெல்வம் தலைமை தாங்கினார். கவுரவ தலைவர் அபிேஷகம், மாநில பொருளாளர் அந்தோணி, மாநில செயலாளர் துரைசெல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.