நெருங்கும் தீபாவளி பண்டிகை பரிதவிப்பில் பேராசிரியர்கள்
புதுச்சேரி: சம்பள கோப்பிற்கு இன்னும் ஒப்புதல் கிடைக்காத நிலையில் பேராசிரியர்கள் பரிதவிப்பிற்குள்ளாகி வருகின்றனர். மாநிலத்தில் உள்ள 21 அரசு சொசைட்டி கல்லுாரிகளில் 2,000 பேராசிரியர்கள், 4,000 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த உயர்கல்வி நிறுவனங்களுக்கு அரசு 100 சதவீதம் மானியம் அளித்து வருகிறது. கடந்த 2016ம் ஆண்டு முன்பு வரை இக்கல்வி நிறுவனங்களுக்கு ஒரு ஆண்டிற்கு தேவையான நிதியை மானியமாக ஒரே தவணையில் வழங்கி வந்தது. இதனால், பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு மாதந்தோறும் குறித்த தேதியில் சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. கடந்த 2016 நிதியாண்டு முதல், 2019 வரை இக்கல்லுாரிகள், மாதாந்தோறும் மானியத்தை பெற்று சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. அதன்பிறகு, இந்த மானியத்தை மூன்று மாதத்திற்கு ஒருமுறை வழங்கி வந்ததால், குறித்த நேரத்தில் சம்பளம் வழங்க முடியவில்லை. இதனால் அவதியுற்ற ஆசிரியர்கள் மற்றும் ஊழியர் சங்கங்கள், ஆண்டிற்கு ஒருமுறை மானியம் வழங்கும் நடைமுறையை பின்பற்ற அரசிடம் வேண்டுகோள் விடுத்தனர். இதனையடுத்து, 2022ம் ஆண்டு முதல் 6 மாதத்திற்கு ஒருமுறை மானியம் வழங்க நிதித்துறை ஒப்புதல் வழங்கி, சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த செப்டம்பர் முதல் வரும் பிப்ரவரி மாதங்களுக்கான மானிய கோப்பிற்கு அரசு இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. அதனால், பல கல்லுாரிகளில் பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கடந்த செப்டம்பர் மாத சம்பளம் வழங்கப்படவில்லை.சில கல்லுாரிகள் கையிருப்பு நிதியை வைத்து கடந்த மாத சம்பளத்தை வழங்கியுள்ளது. கையிருப்பு நிதி இல்லாத கல்லுாரிகளில் இன்றுவரை சம்பளம் வழங்கவில்லை. தீபாவளி பண்டிகைக்கு முன், சம்பளம் வருமா என பேராசிரியர்களும், ஊழியர்களும் கவலையோடு பரிதவித்து வருகின்றனர். அரசு இனியும் தாமதிக்காமல், மானியக் கோப்பிற்கு ஒப்புதல் வழங்கி, தீபாவளிக்கு முன் சம்பளம் வழங்க வேண்டும் என, பேராசிரியர்கள், ஊழியர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.