மாநில இட ஒதுக்கீட்டு கொள்கை அமல்படுத்த முதல்வருக்கு கோரிக்கை
புதுச்சேரி : பிராந்திய இட ஒதுக்கீடு கொள்கையை மறு பரிசீலனை செய்து, மாநில மக்கள் அனைவருக்கும் பொருந்தும் வகையில் 'மாநில இட ஒதுக்கீட்டு கொள்கையை' அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அம்பேத்கர் மக்கள் படை, செம்படுகை நன்னீரகம், தேங்காய்திட்டு முன்னாள் கவுன்சிலர் பாஸ்கர் உள்ளிட்டோர் முதல்வரிடம் அளித்துள்ள மனு: புதுச்சேரி மாநிலம், புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய 4 பகுதிகளை உள்ளடக்கியது. காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பகுதிகளில் கல்வி பயிலும் மாணவர்கள் மிகவும் பின் தங்கியுள்ளனர் என காரணம் கூறி, பொதுவான இட ஒதுக்கீடு அல்லாமல், கூடுதலாக இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இத்தகைய செயல் புதுச்சேரி பகுதி மாணவர்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும், இந்திய அரசியலமைப்பு சட்ட பிரிவுகளுக்கு முரணானதாகும். எனவே, முரண்பாடாக புதுச்சேரி பிராந்திய மாணவர்களின் உயர்கல்வி இடங்களை பறித்துக் கொண்டிருக்கும், இட ஒதுக்கீடு கொள்கையை மறு பரிசீலனை செய்து, மக்கள் அனைவருக்கும் பொருந்தும் வகையில் ஏற்றத்தாழ்வற்ற 'மாநில இட ஒதுக்கீட்டு கொள்கையை' அரசியலமைப்பு சட்டத்திற்குட்பட்டு அமல்படுத்த வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.