மேலும் செய்திகள்
மதுரை விமான நிலையத்தில் ஓட்டமெடுத்த திருமாவளவன்
1 hour(s) ago
மத்திய பட்ஜெட்: தலைவர்கள் கருத்து
1 hour(s) ago
சிகரெட் பாக்கெட் ரூ.50 வரை உயர்வு
1 hour(s) ago
புதுச்சேரி : புதுச்சேரி சட்டசபையில், நடப்பு 2011-12ம் ஆண்டுக்கு, 4830 கோடி ரூபாய்க்கான, வரியில்லாத பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி நேற்று தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:*தட்டாஞ்சாவடி, மதகடிப்பட்டு, கன்னியக்கோவில், கரையாம்புத்தூர், காரைக்கால் ஆகிய இடங்களில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் கூடுதலாக கிடங்குகள் அமைக்கப்படும்.*நெல் விதைகளை சேமிக்க 6 கிராமங்களில் கிடங்கு வசதிகள் ஏற்படுத்தப்படும்.*வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 2510 பேருக்கு, இந்த நிதியாண்டில், கறவை மாடுகள் வாங்க 75 சதவீத மான்யம் வழங்கப்படும்.*நடப்பு ஆண்டில் இருந்து, மீன்பிடி படகுகளின் காப்பீட்டுத் தொகை முழுவதையும், காப்பீட்டு நிறுவனங்களுக்கு அரசே நேரடியாக செலுத்தும்.*கடல் மற்றும் நீர் நிலைகளில் மீன்பிடிக்கும்போது, இறக்க நேரிடும் மீனவரின் குடும்பத்துக்கு, மத்திய அரசு காப்பீட்டுத் தொகையாக அளிக்கும் 1 லட்சம் ரூபாயுடன், மாநில அரசு 2 லட்சம் ரூபாய் அளிக்கும். காணாமல் போகும் மீனவரின் குடும்பத்துக்கு 1.50 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.*கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களின் உறுப்பினர்களால் பெறப்பட்ட கடன்கள் மீதான வட்டி மற்றும் அபராத வட்டிகளை தள்ளுபடி செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.*குறைந்த வருவாய் பிரிவினர் கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்கள் மூலம் பெறப்பட்ட தவணை கடந்த அசல் 1 லட்சம் வரை தள்ளுபடி செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.*பாலுக்கு ஆதரவு விலையாக லிட்டர் ஒன்றுக்கு 1 ரூபாய் கூடுதலாக, ஆரம்ப கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க உறுப்பினர்களுக்கு வழங்கப்படும்.*நெசவாளர்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச மற்றும் அதிகப்பட்ச ஓய்வூதியம் முறையே 1000 ரூபாய் மற்றும் 1250 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.*தபால் நிலையம் மற்றும் வங்கிகள் மூலமாக மின் கட்டணம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.*பிள்ளைச்சாவடியில் பிப்டிக் மூலம் சிறப்பு பொருளாதார மண்டல தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்படும்.*நபார்டு வங்கியில் இருந்து, ஊரக சாலைகளை மேம்படுத்த 30 கோடி ரூபாய் கடன் பெற்று, எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி 1 கோடியில் இருந்து 2 கோடி ரூபாயாக உயர்த்தப்படும்.*காமராஜ் நூற்றாண்டு வீடு கட்டும் திட்டத்தின்கீழ் தற்போது வழங்கப்படும் 1 லட்சம் ரூபாய், இந்த நிதியாண்டில் இருந்து, 2 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.*புதுச்சேரி பகுதியில், 50 ஏக்கர் பரப்பளவில் புதிய தொழிற்பேட்டை அமைக்கப்படும்.*5 ஆண்டுகளில் 20 ஆயிரம் நபர்களுக்கு பயிற்சி அளிக்க, பிப்டிக் மூலம் திறன் மேம்பாட்டு பள்ளிகள் அமைக்கப்படும்.*புதுச்சேரி மாநிலத்தில் தொழில் துவங்குவதை ஊக்குவிக்கும் வகையில், ஆண்டுக்கு 75 ஆயிரம் ரூபாய் அளவிற்கு தற்போது வழங்கப்படும் கடனுக்குரிய வட்டி மீதான மான்யம், 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டு, 5 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.*மருத்துவக் கல்லூரிகளில் சேரும் கட்டட தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு 50 ஆயிரம் ரூபாய், பொறியியல் கல்லூரிகளில் சேரும் பிள்ளைகளுக்கு 25 ஆயிரம் ரூபாய், பிற கல்லூரிகளில் சேரும் பிள்ளைகளுக்கு 10 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்கப்படும்.*அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும் வாரம் மூன்று முட்டைகள் வழங்கப்படும்.*கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பஸ் வசதி இலவசமாக அளிக்கப்படும்.*அரசு பள்ளிகளில் 6ம் வகுப்பில் இருந்து 12ம் வகுப்புவரை படிக்கும் மாணவர்களுக்கு அளிக்கப்படும் ஊக்கத் தொகை நடப்பு கல்வியாண்டு முதல், 250 ரூபாயில் இருந்து 500 ரூபாயாக உயர்த்தப்படும்.*அரசு மகப்பேறு மருத்துவமனை பழைய கட்டடத்தில், சர்க்கரை வியாதிக்கென தனியாக சிகிச்சைப் பிரிவு துவக்கப்படும்.*புதுச்சேரி நகரப் பகுதி முழுவதும் புதிய குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணி 70 கோடி ரூபாய் செலவில் துவங்க உள்ளது.*சாரம் காமராஜர் சாலை-லெனின் வீதி சந்திப்பில் உள்ள பாலம் அகலப்படுத்தப்படும்.*புதுச்சேரி உணவக மேலாண்மை மற்றும் உணவாக்கத் தொழில்நுட்பக் கல்வி நிலையத்தில், புதுச்சேரி மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு அளிக்கப்படும்.*இந்த நிதியாண்டில், 10 ஆயிரம் அட்டவணை இனத்தைச் சார்ந்த குடும்பங்களுக்கு வாஷிங் மெஷின் இலவசமாக வழங்கப்படும்.*மாற்றுத் திறனாளிகளின் ஓய்வூதியம், 40லிருந்து 65 சதவீத ஊனத்திற்கு 1100 ரூபாய், 66-85 சதவீத ஊனத்திற்கு 1400, 86-100 சதவீத ஊனத்திற்கு 1750 ரூபாய் வழங்கப்படும்.*விதவைகள் மறுமண ஊக்கத் தொகை, 20 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் ரூபாயாக, நடப்பாண்டில் உயர்த்தப்படும்.*பதிவு செய்யப்பட்ட பல்வேறு பள்ளிவாசல்களின் உலமாக்களுக்கு மாதத்துக்கு 1000 ரூபாய் உதவித் தொகை அளிக்கும் புதிய ஓய்வூதியத் திட்டம் இந்த நிதியாண்டு முதல் செயல்படுத்தப்படும்.*மின்-ஆளுகை செயல்திட்டத்தின் கீழ், இந்த நிதியாண்டில், மின்-முத்திரையிடும் முறை அறிமுகம் செய்யப்படும் உள்ளிட்ட அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளது.பட்ஜெட் கணக்கு தெரியுமா : நடப்பு 2011-12ம் ஆண்டுக்கு, 4830 கோடி ரூபாய்க்கான பட்ஜெட்டை முதல்வர் நேற்று தாக்கல் செய்தார். இதில், திட்டத்திற்காக 2750 கோடி ரூபாய், திட்டமில்லா செலவிற்காக 2020 கோடி, மத்திய அரசு ஊக்குவிப்புத் திட்டங்களுக்காக 60 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.திட்டச் செலவு 2750 கோடியை, மாநில சொந்த வருவாய் 1320.23 கோடி மூலமும், மாநில கடன் 950 கோடி, அந்நிய உதவித் திட்டங்கள் 100 கோடி மற்றும் மத்திய உதவி 379.77 கோடி ரூபாய் மூலமும் சரிக்கட்டப்படும்.சித்தர் பீடங்களுக்கு நிதி: பட்ஜெட்டில் 'பளீச்' : சித்தர் பீடங்களைப் பராமரிக்க நிதி அளிக்கப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முதல்வர் ரங்கசாமி கூறியதாவது: புதுச்சேரி, சித்தர்கள் வாழும் ஆன்மிக பூமி. இங்கு புகழ்பெற்ற சித்தர் பீடங்கள் வழிபாட்டுத் தலங்களாக உள்ளன. சித்தர் பீடங்களைப் பராமரிக்க நிதி அளிக்க அரசு உத்தேசித்துள்ளது.புதுச்சேரியில் உள்ள வரதராஜப் பெருமாள் கோவில், வேதபுரீஸ்வரர் கோவில், வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவில், திருக்காஞ்சி காசி விசுவநாதர் கோவில், கருவடிக்குப்பம் சித்தானந்தா சுவாமி கோவில் ஆகியவற்றுக்கு புனருத்தாரணம் செய்ய அரசு நிதியளிக்க உத்தேசித்துள்ளது.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago