புதுச்சேரி : சமாதான பேச்சுவார்த்தையின் போது, ஆத்திரமடைந்து கட்டட தொழிலாளியை கொலை செய்த 6 பேரை போலீசார் கைது செய்தனர். இது குறித்து சீனியர் எஸ்.பி., சந்திரன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: ரெட்டியார்பாளையம் லாம்பர்ட் சரவணன் நகர் அடுக்கு மாடி குடியிருப்பு காலி மனையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பூமியான்பேட்டை பாவாணர் நகரைச் சேர்ந்த ஒரு கும்பல் மது குடித்து கொண்டிருந்தது.இதை பார்த்த லாம்பர்ட் சரவணன் நகரை சேர்ந்த கட்டட தொழிலாளியான ராபர்ட் ராஜா, 22; தனது நண்பர்கள் ராமு, வேல்முருகன், சங்கர் ஆகியோருடன் சென்று, மது குடித்து கொண்டிருந்த கும்பலை தட்டி கேட்டார். அப்போது இரு கோஷ்டிகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையறிந்த லாம்பர்ட் சரவணன் நகரைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், இரு கோஷ்டிகளையும் வரவழைத்து சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர்.இதில், ஆத்திரமடைந்த பாவாணர் நகரைச் சேர்ந்த கும்பல், ராபர்ட் ராஜாவையும், அவரது நண்பர்களையும் தாக்கினர். இதில், ராபர்ட் ராஜா உயிரிழந்தார். இது குறித்து ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து, கொலையாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று, ஜவகர் நகரைச் சேர்ந்த மது, 19, சேஷா பிள்ளை, 20, பூமியான்பேட்டையைச் சேர்ந்த பிரியன், 20, அன்புராஜ், 19, பாவாணர் நகரைச் சேர்ந்த பிரபு, சாரங்கபாணி, 20, ஆகிய 6 பேரையும் மூலகுளம் மோட்டார் கொட்டகை போலீசார் கைது செய்தனர்.அவர்களிடமிருந்து கத்தி, இரும்பு பைப் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர். இவ்வாறு சந்திரன் கூறினார். கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை விரைந்து பிடித்த இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் மற்றும் போலீசாரை, சீனியர் எஸ்.பி. சந்திரன் பாராட்டினார்.