ரூ. 45 லட்சம் மானிட்டர் மாயம்: கூரியர் நிறுவனம் மீது வழக்கு
புதுச்சேரி : தனியார் கூரியர் நிறுவனம் மூலம் டில்லிக்கு அனுப்பிய 45 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கம்ப்யூட்டர் மானிட்டர்கள் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேதராப்பட்டு அடுத்த கரசூரில் டாப் விக்டரி இன்வெஸ்ட்மென்ட் என்ற தனியார் நிறுவனம் உள்ளது. இக்கம்பெனி மேலாளராக விஜய சுந்தர் வேலை செய்து வருகிறார். இங்கு கணினி மானிட்டர் ஸ்டாக் வைத்து இந்தியா முழுவதும் அனுப்பும் பணி நடந்து வருகிறது. கடந்த மே மாதம் 27ம் தேதி ரெட்டியார்பாளையத்தில் உள்ள தனியார் கார்கோ எக்ஸ்பிரஸ் கூரியர் நிறுவனத்தில், 45 லட்சத்து 82 ஆயிரத்து 239 ரூபாய் மதிப்புள்ள 1217 மானிட்டர்கள் டில்லி உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பப்பட்டன. 15 நாட்களில் சேர வேண்டிய மானிட்டர்கள் அங்கு முறையாக சேர்க்கப்படவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த விஜயசுந்தர், கூரியர் நிறுவனம் மோசடி செய்து விட்டதாக போலீசில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்யக்கோரி, புதுச்சேரி ஜே.எம்.1 கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்நிலையில் கோர்ட் உத்தரவுப்படி சேதராப்பட்டு போலீசார் நேற்று முன்தினம் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.