| ADDED : அக் 15, 2011 02:33 AM
புதுச்சேரி : அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 3 ஆயிரம் ரூபாய் தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என ஏ.ஐ.டி.யூ.சி., கோரிக்கை விடுத்துள்ளது. புதுச்சேரி மாநில ஏ.ஐ.டி.யூ.சி., நிர்வாகக்குழு கூட்டம் முதலியார்பேட்டை அலுவலகத்தில் நடந்தது. ஏ.ஐ.டி.யூ.சி., மாநில தலைவர் விசுவநாதன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் அபிஷேகம், துணைத் தலைவர் ரவி, துணைப் பொதுச் செயலாளர் தினேஷ் பொன்னையா, செயலாளர் சந்திரசேகரன், பொருளாளர் ஜெயபால், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ரங்கநாதன், கலியபெருமாள், முத்துவேல், கோபதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 3 ஆயிரம் ரூபாய் தீபாவளி போனஸ் வழங்க வேண்டும். வேலை வாய்ப்பு இன்றி நலிவடைந்துள்ள கைத்தறி தொழிலாளர்களுக்கு 50 சதவிகித ஊக்கத்தொகை உச்சவரம்பின்றி, தீபாவளி பண்டிகைக்கு 10 தினங்களுக்கு முன்னதாக வழங்கப்பட வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் நாளொன்றிற்கு 115 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ள சூழ்நிலையில், அமைப்புசாரா தொழிலாளர் நலச்சங்கத்தில் உறுப்பினராக சேருவதற்கான ஊதிய உச்ச வரம்பு ஆண்டுக்கு 2 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.