| ADDED : நவ 19, 2025 07:19 AM
திருபுவனை: மதகடிப்பட்டு வார சந்தையில் தொடர் மழை காரணமாகதண்ணீர் தேங்கி, வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர். மதகடிப்பட்டு நான்குவழிச்சாலையையொட்டி வாரந்தோறும் செவ்வாய் கிழைமையில், வார சந்தை நடந்துவருகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிரபலமான இந்த சந்தையில் கால்நடைகள் விற்பனை மட்டுமின்றி, காய்கறிகள், பழங்கள், மீன், கருவாடு, வீட்டு உபயோகப் பொருட்கள், விதைகள், மரக்கன்றுகள், பூச்செடிகள், காய்கறி நாற்றுகள், கீரை வகைகள் உள்ளிட்ட அனைத்து விதமான பொருட்களும் விற்பனை செய்வது வழக்கம். சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க சந்தைக்கு வருவது வழக்கம். இந்நிலையில் சமீபத்தில் பெய்து வரும் தொடர் மழையால் சந்தை வளாகம் சேறும் சகதியுமாக மாறியது. இதனால், வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர். மினி வேன் மற்றும் லாரிகளில்பொருட்களை விற்பனை செய்ய வந்த வியாபாரிகள் தங்கள் பொருட்களை சேற்றிலும் சகதியிலும் வைத்து விற்பனை செய்ய முடியாமல் அவதிக்குள்ளாயினர். சந்தை வளாகத்தையொட்டியுள்ள சர்வீஸ் சாலை மற்றும் மழைநீர் தேங்காத பகுதிகளில் வியாபாரிகள் சிலர் கடை விரித்தனர். இந்நிலையில், நேற்று வார சந்தையில், வெளியூர் வியாபாரிகளின் வருகை வெகுவாக குறைந்தது. சேறும், சகதியால், மக்களும் பொருட்களை வாங்க சுணக்கம் காட்டியதால் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.