| ADDED : பிப் 21, 2024 08:46 AM
புதுச்சேரி, : கழிவுநீர் மற்றும் செப்டிக் டேங்க் துாய்மை செய்யும் தொழிலாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் திட்டத்தின் கீழ், நமஸ்தே செயலியில் பதிவு செய்யும் முகாம் இன்றுடன் முடிவடைகிறது.உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் செய்திக்குறிப்பு:மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம், சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகம் , தேசிய துப்புரவு பணியாளர்கள் நிதி மற்றும் மேம்பாட்டு கழகம் இணைந்து, தனியார் கழிவுநீர் மற்றும் செப்டிக் டேங்க் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், புதிய திட்டம் துவக்கப்பட்டுள்ளது.தொழிலாளர்களுக்கு தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள், துப்புரவு தொடர்பான வாகனங்கள் வாங்குவதற்கு மூலதன மானியத்துடன் கடனுதவி வழங்க உள்ளது. உழவர்கரை நகராட்சி, புதுச்சேரி நகராட்சி, பொதுப்பணித்துறை பணியாளர்கள் மற்றும் தனியார் கழிவுநீர் மற்றும் செப்டிக் டேங்க் துாய்மை தொழிலாளர்களின் விபரங்கள் இத்திட்டத்தின் கீழ், நமஸ்தே செயலியில் பதிவு செய்யப்பட்டு வருகிறது.இந்த திட்டத்தின் மூலம் பதிவு செய்யும் முகாம், உழவர்கரை நகராட்சியில் நேற்று முன்தினம் துவங்கியது. இன்று 21ம் வரை நடக்கும் முகாமில் பதிவு செய்து கொள்ளலாம்.இவ்வாறு அவர், தெரிவித்துள்ளார்.நேற்று நடந்த முகாமில், உள்ளாட்சி துறை இயக்குநர் சக்திவேல், துணை இயக்குனர் சவுந்திரராஜன், நகராட்சி சுகாதார அதிகாரிகள், உள்ளாட்சி திட்ட மேலாண்மை குழுவினர் பங்கேற்றனர்.