விளையாட்டு மைதானத்தை சுத்தம் செய்ய கோரிக்கை
காரைக்கால்,: காரைக்காலில் புதர்மண்டியுள்ள விளையாட்டு மைதானத்தை சுத்தம் செய்து தர வேண்டும் என, விளையாட்டு வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.காரைக்கால் மாவட்ட கிழக்கு புறவழிச்சாலையில் உள்ள விளையாட்டு மைதானம் 5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. மைதானத்தில் டென்னிஸ், கிரிக்கெட், வில்அம்பு பயிற்சி, கால்பந்து, கூடைப்பந்து என, பல்வேறு விளையாட்டு பயிற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.மேலும் தடகளம், ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் என தினசரி மாணவர்கள், இளைஞர்கள் பயிற்சி செய்து வருகின்றனர். மழை காலங்களில் மைதானத்தை சுற்றி குளம்போல் தண்ணீர் தேங்கியுள்ளது. ஆனால் சரியான வடிக்கால் வசதி இல்லாமல் தண்ணீர் வெளியேற வழியின்றி உள்ளது. மேலும் மைதானத்தில் தற்போது புதர் மண்டியுள்ளதால் தினம் விஷப்பூச்சிகள் அதிகம் காணப்படுகிறது. சில இடங்களில் மட்டும் விளக்குகள் எரிகிறது. மறுப்பக்கம் விளக்குகள் எரிவதில்லை. இதனால் விளையாட்டு வீரர்கள் மாலை நேரங்களில் பயிற்சி மேற்கொள்ள முடியாமல் பாதிக்கின்றனர். எனவே கோடைவிடுமுறை வருவதால், மைதானத்தில் புதர்களை சுத்தம் செய்ய வேண்டும். சுத்தமான குடிநீர் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாவட்ட நிர்வாகத்திற்கு விளையாட்டு வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.