| ADDED : மார் 13, 2024 06:52 AM
புதுச்சேரி : பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சிறுமி வளர்த்த நாய், உணவு ஏதும் உட்கொள்ளாமல் மெலிந்து வருகிறது. புதுச்சேரியைச் சேர்ந்த 9 வயது சிறுமி கடந்த 2ம் தேதி மாயமானார். போலீசார் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால், 5ம் தேதி கை கால்கள் கட்டிய நிலையில் சிறுமியின் உடல் வாய்க்காலில் கண்டெடுக்கப்பட்டது.பிரேத பரிசோனையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக விவேகானந்தன், கருணாஸ் ஆகிய இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.கொலை செய்யப்பட்ட சிறுமி, கடந்த பல மாதத்திற்கு முன்பு ஆசையாக கேட்டதால், சிப்பிபாறை நாய் ஒன்றை பெற்றோர் வாங்கி கொடுத்துள்ளார். அதற்கு ரோசி என பெயரிட்டு அச்சிறுமி வளர்த்து வந்தார். சிறுமி தினமும் நாய்க்கு உணவு கொடுத்து விட்டு அதன் பின்னரே சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். மேலும், தனக்கு பிடித்த நுாடூல்ஸ் உணவையும், நாய்க்கும் கொடுத்து பழகி வந்துள்ளார். சிறுமி கொலை செய்யப்பட்டு உயிரிழந்த கடந்த 2ம் தேதி முதல் நாய் ரோசி எதுவும் சாப்பிடாமல், இரவு நேரத்தில் அழுது வருகிறது. அக்கம்பக்கத்தினர் எந்த உணவு கொடுத்தாலும் நாய் சாப்பிடாமல் உடல் மெலிந்து வருகிறது. யாரை பார்த்தாலும் குரைக்கும் நாய் கடந்த ஒரு வாரமாக சத்தமின்றி அமைதியாகவும், இரவு நேரத்தில் அழுது வருவதாக அப்பகுதி இளைஞர்கள் வருத்தத்துடன் தெரிவித்தனர்.