வங்கி கணக்கு, சிம் கார்டு கொடுக்க வேண்டாம் சீனியர் எஸ்.பி., எச்சரிக்கை
புதுச்சேரி : பணம் தருவதாக கூறி, வங்கி கணக்கு மற்றும் சிம்கார்டு கேட்டால் கொடுக்க வேண்டாம் என, சீனியர் எஸ்.பி., நித்யா ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர், கூறியதாவது: வீட்டில் இருந்தபடியே, ஆன்லைன் வர்த்தகம் மூலமாக அதிக பணம் சம்பாதிக்கலாம் என, பகுதி நேர வேலை வாய்ப்புகள் வழங்குகிறோம் என்று ஆசை வார்த்தைகள் கூறினால், அதனை நம்பி யாரும் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம். பிடெக்ஸ் கொரியர், டிராய், மும்பை போலீசில் இருந்து பேசுவதாக கூறி, உங்களை டிஜிட்டல் அரஸ்ட் செய்துள்ளோம் என்று கூறினால், அவர்களது தொடர்பை உடனடியாக துண்டித்து விட்டு, போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். உங்கள் வங்கி கணக்கு சஸ்பெண்ட் செய்வதாக கூறி வாட்ஸ் ஆப் மூலமாக ஏதேனும் லிங்க் மற்றும் ஆப் மெசேஜ் வந்தால் அதனை லிங்க் செய்ய வேண்டாம். மொபைல் ஆப் மூலம் உடனடி கடன் மற்றும் குறைந்த வட்டியில் லோன் தருவதாக கூறி, உங்களுடைய புகைபடங்களை பெற்று கொண்டு ஆபாசமாக சித்தரித்து மிரட்டினால் அதனை நம்பி யாரும் பணம் செலுத்தி வேண்டாம். ஆன்லைனில் அல்லது தெரிந்தவர்கள் யாரேனும் உங்களிடம் பணம் தருவதாக கூறி, வங்கி கணக்குகள் மற்றும் சிம் கார்டு கேட்டால் அதனை நம்பி வாங்கி தர வேண்டும். அதனை மீறி அவர்களிடம் உங்களுடைய வங்கி கணக்கு மற்றும் சிம் கார்டுகளை கொடுத்து, அதன் மூலம் சைபர் மோசடி நடந்ததால் உங்கள் மீது கைது நடவடிக்கை எடுக்க நேரிடும். இதுபோன்று தொடர்பு கொள்ளும் நபர்களை உறுதிப்படுத்தாமல் எந்த செயலையும் செய்ய வேண்டாம். இது மோசடிக்காரர்கள் பயன்படுத்தும் யுக்திகள் ஆகும். மேலும், சைபர் மோசடி தொடர்பான புகார்கள் மற்றும் சந்தேகங்களுக்கு சைபர் கிரைம் போலீஸ் நிலைய 1930, 0413-2276144, 9489205246 மற்றும் cybercell-py.gov.inதொடர்பு கொள்ளலாம்' என்றார்.