உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வல்லபாய் பட்டேல் 150வது பிறந்த நாள் ஒற்றுமை பேரணி: நமச்சிவாயம் தகவல்

வல்லபாய் பட்டேல் 150வது பிறந்த நாள் ஒற்றுமை பேரணி: நமச்சிவாயம் தகவல்

புதுச்சேரி : வல்லபாய் பட்டேல் 150வது பிறந்தாளை முன்னிட்டு ஒற்றுமை பேரணி நடத்த உள்ளதாக அமைச்சர் நமச்சிவாயம் கூறினார். அவர், கூறியதாவது: சர்தார் வல்லபாய் பட்டேலின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு, நாடு முழுதும் லோக்சபா தொகுதி வாரியாக மூன்று ஒற்றுமை பேரணி நடத்தப்படுகிறது. புதுச்சேரி தொகுதியிலும் 3 பிரிவுகளாக பேரணி வரும் 31ம் தேதி முதல் நவ., 25ம் தேதி வரை நடக்கிறது. 8 கி.மீ., முதல் 10 கி.மீ., துாரம் வரை நடத்தப்படும் இப்பேரணியில், இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள், ஓய்வுபெற்ற அதிகாரிகள், சமூகத்தில் முக்கிய பொறுப்பில் உள்ளோர் கலந்து கொள்கின்றனர். வரும் 2047ம் ஆண்டுக்கான 'விக் ஷித் பாரத்' என்ற பிரதமரின் கனவை நனவாக்கும் வகையில் பேரணி அமையும். 'ஆத்ம பாரத்' என்று சொல்லக்கூடிய இந்திய நாட்டில் தயாரிக்கும் பொருட்களை இளைஞர்கள், பொதுமக்கள் வாங்கி பயன்படுத்த வேண்டும் என்பது போன்ற விழிப்புணர்வை உருவாக்கும் விதமாக பேரணி நடக்கிறது. இப்பேரணியில் பங்கேற்க மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா 'மை பாரத்' என்ற போர்டலை அறிமுகம் செய்துள்ளார். அதன்மூலம் அனைத்து இளைஞர்களையும் ஒருங்கிணைத்து லோக்சபா தொகுதி, மண்டல வாரியாக பேரணி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பள்ளி, கல்லுாரிகளில் இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்திட கட்டுரை, பேச்சு, ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட உள்ளது. ஒரு லட்சம் இளைஞர்களை, இளம் தலைவர்களை தேசத்துக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் உருவாக்க வேண்டும் என்பது பிரதமரின் எண்ணம். அதை நிறைவேற்றிட தன்னார்வ அமைப்புகள், பள்ளி, கல்லுாரி மாணவர்களை ஒருங்கிணைத்து பேரணியில் பங்கேற்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நவம்பர் 26ம் தேதி அரசியமைப்பு தினத்தன்று குஜராத் மாநிலம், சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த இடமான கரம்சாத்திலிருந்து, கெவாடியாவில் உள்ள அவரின் ஒற்றுமை சிலை வரை 152 கி.மீ., துாரத்திற்கு பேரணி நடக்கிறது. இப்பேரணியில் நாடு முழுதும் இருந்து இளைஞர்கள், முக்கிய தலைவர்கள் பங்கேற்கின்றனர். இளைஞர்களிடையே ஒற்றுமை, தேசபக்தியின் உணர்வை எழுப்புவதே இப்பேரணியின் நோக்கம். போதை இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும். கலாசாரம், பண்பாடு இவற்றையெல்லாம் இளைஞர்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் இப்பேரணி அமையும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !