உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரியில் தரமற்ற மருந்து முறைகேடு வழக்கில் மேலும் சிலருக்கு போலீஸ் வலை

புதுச்சேரியில் தரமற்ற மருந்து முறைகேடு வழக்கில் மேலும் சிலருக்கு போலீஸ் வலை

புதுச்சேரி: புதுச்சேரியில், அரசு மருத்துவமனைக்கு தரமற்ற மருந்து வாங்கிய முறைகேடு வழக்கில் மேலும் சிலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் தேடி வருகின்றனர். புதுச்சேரியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சமுதாய நலவழி மையங்களில் கடந்த 2018-19ம் ஆண்டு தரமற்ற மருந்து வாங்கியது விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக, சுகாதாரத்துறை சிறப்பு பணி அதிகாரி மேரி ஜோஸ்பின் சித்ரா அளித்த புகாரில், கடந்த 2023ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிந்து மருந்தாளுநர் நடராஜனை கைது செய்தனர். மேலும், நடராஜன் தனது மனைவி புனிதா பங்குதாரராக கொண்ட சாய்ராம் ஏஜென்சி, தனது நண்பர் பெயரில் உள்ள பத்மஜோதி ஏஜென்சி என்ற இரு கம்பெனிகளை போலியாக உருவாக்கி, மருந்து, மாத்திரைகளை கொள்முதல் செய்து முறைகேட்டில் ஈடுபட்டதும், இதன் மூலமாக அரசுக்கு ரூ.2.5 கோடி இழப்பு ஏற்படுத்தியதும் தெரியவந்தது. மேலும், இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறை இன்ஸ்பெக்டர் வெங்கடாசலபதி தலைமையிலான போலீசார், சுகாதாரத்துறை முன்னாள் இயக்குனர்கள் ராமன்,67; மோகன்குமார், 65; முன்னாள் துணை இயக்குநர் அல்லிராணி,62; சாய்ராம் ஏஜென்சியின் பங்குதாரர்களான நடராஜன் மனைவி புனிதா, 34; நந்தகுமார், பத்மஜோதி ஏஜென்சி உரிமையாளர் மோகன் ஆகிய 6 பேரை நேற்று முன்தினம் கைது செய்தனர். இதற்கிடையே, வழக்கில் தொடர்புடைய சாய்ராம் ஏஜென்சியின் உரிமையாளரும், தலைமை செயலக அதிகாரியுமான கணேசன் கார்த்திக், அவரின் தந்தை ஜானகிராமன், தாய் ஜெயந்தி, சகோதரர் வெங்கடேச பிரசன்னா, நடராஜனின் உறவினர் ஏழுமலை உள்ளிட்ட மேலும் சிலர் மீது போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ