உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தினமலர் - பட்டம் மெகா வினாடி வினா போட்டி நான்கு மாவட்ட மாணவர்கள் ஆர்வமாக பங்கேற்பு

தினமலர் - பட்டம் மெகா வினாடி வினா போட்டி நான்கு மாவட்ட மாணவர்கள் ஆர்வமாக பங்கேற்பு

புதுச்சேரி : புதுச்சேரியில் நடந்த 'தினமலர் - பட்டம்' இதழின் மெகா வினாடி வினா இறுதி போட்டியில் நான்கு மாவட்டங்களை சேர்ந்த மாணவ மாணவிகள் உற்சாகத்துடன் பங்கேற்று, அசத்தலாக பதில் அளித்தனர். இறுதி சுற்று வரை விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியில், புதுச்சேரி அமலோற்பவம் லுார்து அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளி முதலிடம் பிடித்து பரிசு கோப்பையை தட்டிச் சென்றது.நாட்டின் எதிர்காலமாக விளங்கும் மாணவர்களுக்கு, சிறப்பான அடித்தளம் அமைக்கும் நோக்கில், தினமலர் நாளிதழ், 'பட்டம்' எனும் இதழை மாணவர் பதிப்பாக வெளியிட்டு வருகிறது. இது, தமிழில் வெளியாகும், ஒரே மாணவர் பதிப்பாக திகழ்கிறது. பள்ளி மாணவர்களின் பொது அறிவை வளர்க்கும் வகையில், பள்ளி அளவிலும், மாநில அளவில் கடந்த 2018ம் ஆண்டு முதல் மெகா வினாடி வினா போட்டியை, 'பட்டம்' இதழ் நடத்தி வருகிறது.இந்தாண்டு, புதுச்சேரி ஆச்சாரியா கல்விக் குழுமத்துடன் இணைந்து நடத்திய மெகா வினாடி வினா போட்டி, வி-3 (வினாடி-- வினா- விருது) என்ற பெயரில் புதுச்சேரி, கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களை சேர்ந்த 150 பள்ளிகளில் கடந்த செப்டம்பர் மாதம் துவங்கியது. இதில் மொத்தம் 35 ஆயிரம் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.முதற்கட்ட போட்டியில், ஒவ்வொரு பள்ளியிலும் தேர்வு செய்யப்பட்ட, 600 மாணவர்களுக்கான இறுதிச்சுற்று வினாடி வினா போட்டி, புதுச்சேரி ஜிப்மர் அப்துல் கலாம் ஆடிட்டோரியத்தில் நேற்று நடந்தது.இதில், எழுத்து தேர்வில் 20 கேள்விகள் கேட்கப்பட்டன. இதில் அதிக மதிப்பெண் பெற்ற எட்டு பள்ளிகளின் அணிகள் இறுதிபோட்டி தேர்வு செய்யப்பட்டன. இறுதி சுற்று வினாடி வினா போட்டியானது, மாத்தி யோசி, வாய்ப்புகள் மூன்று, உன் வாய்ப்பு உன் கையில், விட்டால் போச்சு, பட்டம்.. வேகம்.. விவேகம் என ஐந்து சுற்றுகளாக நடந்தது. 'பட்டம்' இதழ் பொறுப்பாசிரியர் வெங்கடேஷ் அறிமுக உரையாற்றினார்.

புதுச்சேரி முதலிடம்

ஒவ்வொரு சுற்றிலும் 'குவிஸ்' நடுவர் அரவிந்த் வீசிய கேள்விக் கனைகளுக்கு அதேவேகத்தில், மாணவர்கள் அசத்தலாக பதில் அளித்து புள்ளிகளை பெற்றனர். இதனால் ஒவ்வொரு சுற்றிலும் அணிகளின் புள்ளி பட்டியலில் ஏற்ற இறக்கம் இருந்து கொண்டே இருந்தது. இறுதியில், புதுச்சேரி கொம்பாக்கம் அமலோற்பவம் லுார்து அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளியின் பிளஸ் 2 மாணவர்கள் நவீனபிரியன், பூவராகவன் ஆகியோர் அடங்கிய அணி முதலிடத்தை தட்டிச் சென்றது. அவர்களுக்கு பரிசாக தினமலர் கோப்பை, கேடயம், பதக்கம் மற்றும் லேப்டாப் வழங்கப்பட்டது.கடலுார் மாவட்டம், பண்ருட்டி திருவள்ளுவர் மெட்ரிக் மேனிலைப் பள்ளி பிளஸ் 1 மாணவர்கள் நித்யஸ்ரீ, பாலபாரதி ஆகியோர் கொண்ட அணி, இரண்டாம் பரிசை வென்றது. இவர்களுக்கு கோப்பை, கேடயம், இரண்டு லேப்டாப்கள் பரிசாக வழங்கப்பட்டன. இந்த மாணவர்கள் கடந்தாண்டும் இரண்டாம் பரிசு பெற்றிருந்தனர்.புதுச்சேரி வாணரபேட்டை அமலோற்பவம் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவர்கள் ராகவ், ருத்திஸ்வரன் ஆகியோர் அடங்கிய அணி மூன்றாம் இடம் பிடித்தது. இவர்களுக்கு பரிசாக கோப்பை, கேடயம், இரண்டு டேப்லெட்கள் வழங்கப்பட்டன.

ஆறுதல் பரிசு

புதுச்சேரி தேங்காய்திட்டு ஆச்சார்யா பால சிக் ஷா மந்திர் பள்ளியின் பிளஸ் 1 மாணவி மோனிஷா, ஒன்பதாம் வகுப்பு மாணவி பத்மபிரியை ஆகியோர் கொண்ட அணி நான்காம் இடம் பிடித்தது கடலுார் கிருஷ்ணசாமி மெமோரியல் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 1 மாணவர்கள் சஞ்சிவ், முகமது முஜம்மில்கான் ஆகியோர் அடங்கிய அணி ஐந்தாம் இடம் பிடித்தது. உளுந்துார்பேட்டை சாரதா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் திருமலை, திலீபன் ஆகியோர் கொண்ட அணி ஆறாம் இடம் பெற்றனர். புதுச்சேரி பெத்திசெமினார் மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு மாணவர் சத்ரேஷ், ஒன்பதாம் வகுப்பு மாணவர் பெஞ்சமின் போர்ட் லுாயிஸ் ஆகியோர் அடங்கிய அணி ஏழாம் இடம், புதுச்சேரி வ.உ.சி., மேல்நிலைப் பள்ளி பிளஸ் 1 மாணவர்கள் லோகேஷ்வரன், அருள்மணி அடங்கிய அணி எட்டாம் இடம் பிடித்தனர்.இந்த அணிகளுக்கு பரிசாக, கோப்பை, கேடயம் மற்றும் ஸ்மார்ட் வாட்ச் வழங்கப்பட்டது. பரிசுகளை, சிறப்பு விருந்தினர்களான புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதன், தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவர் ராமசுப்ரமணியன், புதுச்சேரி தினமலர் வெளியீட்டாளர் கே.வெங்கட்ராமன், ஆச்சார்யா கல்விக் குழுமத் தலைவர் அரவிந்தன், ஆகியோர் வழங்கி, பாராட்டினர்.

பார்வையாளர்களுக்கு பரிசு

இறுதி சுற்றில் பங்கேற்க தவறினாலும், பார்வையாளராக இருந்த மாணவர்கள், எட்டு அணிகளும் பதிலளிக்க திணறிய கேள்விகளுக்கு அசத்தலான பதிலளித்து கைத்தட்டலை அள்ளினர். அவர்களுக்கு புளுடூத் நெக்பாண்ட் பரிசாக வழங்கப்பட்டது.வெற்றி பெற்றவர்கள் பரிசுகளுடன் திரும்ப, வெற்றியை தவறவிட்ட மாணவர்கள் அடுத்த முறை பொது அறிவில் பட்டை தீட்டிக்கொண்டு பலமாக வருவோம் என நம்பிக்கையுடன் விடைபெற்றனர்.

பள்ளிகளுக்கு நினைவு பரிசு

வினாடி வினா முதற்கட்ட போட்டியில், அதிக மாணவர்களை பங்குபெற செய்த புதுச்சேரி முத்தியால்பேட்டை ஆல்பா ஆங்கில மேல்நிலைப்பள்ளி மேனேஜிங் ட்ரஸ்ட்டி டாக்டர் நவீன் தியாகு, கடலுார் லட்சுமி சோரடியா மெமோரியல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் மாவீர்மல் சோரடியா, விழுப்புரம் சரஸ்வதி கல்வி குழும நிர்வாக இயக்குநர் முத்துசரவணன், பொருளாளர் சிதம்பரநாதன், உளூந்துார்பேட்டை ஸ்ரீராமகிருஷ்ணா வித்யாலயா குருகுல பள்ளி மக்கள் தொடர்பு அலுவலர் சரோஜா, விழுப்புரம் சேக்ரட் ஹார்ட் கான்வென்ட் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் கார்த்தீபன், சார்லஸ் ஆகியோருக்கு, அந்நிறுவனங்களின் கல்வி சேவையை பாராட்டி நினைவு பரிசு வழங்கப்பட்டன. சிறப்பு விருந்தினர்கள் நினைவு பரிசு வழங்கி பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை