| ADDED : ஜன 12, 2024 03:49 AM
புதுச்சேரி: புதுச்சேரியில், குடும்ப தலைவிகளுக்கான உதவித்தொகை மற்றும் பெண் குழந்தைகளுக்கான வைப்பு நிதி திட்டம் குறித்து, அமைச்சர் தேனீ ஜெயக்குமார் ஆய்வு செய்தார்.புதுச்சேரி சட்டசபை கூட்டத் தொடரின் போது குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 மற்றும் பெண் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் வைப்பு நிதி போன்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, தற்போது செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இதுகுறித்த ஆய்வுக்கூட்டம் சமூக நலத்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தலைமையில் சட்டசபையில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று நடந்தது.இதில் சமூக நலத்துறை செயலர் பங்கஜ்குமார் ஜா, துறை இயக்குனர் குமரன், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை இயக்குனர் முத்துமீனா மற்றும் இணை இயக்குனர், துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கூட்டத்தில் திட்டங்களின் செயல்பாடுகள், தற்போதைய நிலை குறித்து அமைச்சர் தேனீ ஜெயக்குமார் கேட்டார்.அப்போது அவரிடம் அதிகாரிகள், குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 திட்டத்தில் இதுவரை, 70 ஆயிரம் பெண்கள் தேர்வு செய்யப்பட்டுள் ளனர். அதன்படி 40 ஆயிரம் பெண்களுக்கு வழங்கப்பட்ட நிலையில், மீதமுள்ளவர்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.தற்போது வரும் விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டு கணினியில் பதிவேற்றம் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. பெண் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் வைப்பு நிதி திட்டத்தில் புதிதாக, 500 நபர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என அதிகாரிகள் தெரிவித்தனர்.