லட்சக்கணக்கில் சம்பளம் பெறும் ஆசிரியர்கள் பள்ளியில் பாடம் எடுப்பதைவிட்டு கல்வி துறையில் எல்.டி.சி., யூ.டி.சி., பணி செய்ய வேண்டிய அவசியம் என்ன என்று கேள்வி எழுந்துள்ளது. ஒரு சமூகத்தின் எதிர்காலத்தை வடிவமைக்கும் இடம் எது என்றால், அது அரசியல் அரங்கமோ, நிர்வாக அலுவலகமோ அல்ல. அது ஒரு பள்ளி வகுப்பறை. அந்த வகுப்பறையில் கரும்பலகைக்கு முன் நின்று, கனவுகளை விதைக்கும் ஆசிரியர் தான் ஒரு நாட்டின் உண்மையான சிற்பி. ஆனால் இன்றைக்கு புதுச்சேரி அரசு பள்ளிகளில் அந்த வகுப்பறைகள் வெறிச்சோடி நிற்க, ஆசிரியர்கள் அலுவலக மேசைகளின் பின்னால் முடங்கிக் கிடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது ஒரு துரதிருஷ்டவசமான உண்மையாக உள்ளது. பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை தலை துாக்கியுள்ள சூழ்நிலையில் 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் அலுவலக பணியில் முடக்கப்பட்டுள்ளதாக பகீர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பல ஆண்டுகளுக்கு முன் புதுச்சேரி அரசு துறைகளில் எல்.டி.சி., யூ.டி.சி.,அசிஸ்டண்ட்போன்ற அமைச்சகப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தன. இதன் விளைவாக, அனைத்து துறைகளிலும் அமைச்சகப் பணியாளர்கள் கடும் தட்டுப்பாடு உருவானது. இந்த நிர்வாகச் சிக்கலின் சுமை கல்வித்துறையிலும் விழுந்தது. அப்போது தற்காலிக ஏற்பாடு என்ற பெயரில், பள்ளிகளில் பணியாற்றிய கூடுதல் ஆசிரியர்கள் எல்.டி.சி., யூ.டி.சி., பணிகளுக்கு மாற்றப்பட்டனர். அந்த நேரத்தில் அது அவசியமாக இருந்திருக்கலாம். ஆனால் அவசரத்தில் தொடங்கிய நடைமுறை, இன்று அலட்சியமாக தொடர்வதே பிரச்னையாக உள்ளது. இன்று நிலைமை என்ன இன்று எல்.டி.சி., யூ.டி.சி.,அசிஸ்டண்ட்போன்ற பெரும்பாலான பணியிடங்களை அரசு நிரப்பி, அமைச்சகப் பணியாளர் தட்டுப்பாட்டை பெரிதும் போக்கியுள்ளது. அப்படியிருக்க, இன்னும் ஏன் கல்வித்துறையில் ஆசிரியர் சம்பளம் வாங்கிக்கொண்டு 50க்கும் மேற்பட்டோர் அலுவலகப் பணி செய்து வருகிறார்கள். ஏன் அவர்கள் பள்ளி வகுப்பறைகளில் பாடம் எடுக்க வருவதே இல்லை என்பதே மற்ற ஆசிரியர்களின் மன குமுறலாக உள்ளது. இது ஒன்றும் புதிய பிரச்னையல்ல. ருத்ரகவுடு கல்வித்துறை இயக்குனராக இருந்த காலத்தில், இந்த தவறான நடைமுறை குறித்து கவனத்திற்கு வந்தது. அப்போது பல ஆசிரியர்கள் மீண்டும் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டனர். ஆனால் இன்று மீண்டும் அதே தவறு… மீண்டும் அதே அலட்சியம் தொடர்கிறது. புதுச்சேரியின் மேல்நிலைப் பள்ளிகளில் விரிவுரையாளர் தட்டுப்பாடு மிகக் கடுமையாக உள்ளது. குறிப்பாக, வணிகவியல், பொருளியல் போன்ற பாடங்களில் ஆசிரியர் பற்றாக்குறை மாணவர்களின் எதிர்காலத்தை நேரடியாக பாதிக்கிறது. ஒரே ஆசிரியர் இரண்டு பள்ளிகளில் பணியாற்றும் அவலம் தொடர்கிறது. மறுபுறம் கல்வித்துறையின் வட்ட ஆய்வாளர் அலுவலகம் முதல் பல்வேறு இணை இயக்குனர் அலுவலகம் வரை இவற்றில் 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தேவையின்றி அலுவலகப் பணி செய்து வருகின்றனர். வியப்பூட்டும் உண்மை என்னவென்றால், ஆசிரியர்களுக்கென கல்வித்துறையில் சில நிரந்தர பணியிடங்கள் மட்டுமே உள்ளன. அதையும் மீறி, உட்கார இடம் இல்லாமலே ஆசிரியர்கள் அலுவலகங்களில் பணி புரிந்து வருவதாக கூடுதல் பணி சுமையில் ஆசிரியர்கள் புலம்பி வருகின்றனர். லட்சக்கணக்கில் சம்பளம் பெறும் ஆசிரியர்கள் பள்ளியில் பாடம் எடுப்பதைவிட்டு கல்வி துறையில் எல்.டி.சி., யூ.டி.சி., பணி செய்ய வேண்டிய அவசியம் என்ன என்று அவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். கல்வி துறையில் அமைச்சக பணி செய்யும் ஆசிரியர்களை மீண்டும் பள்ளிகளுக்கே திருப்பி அனுப்பி புதுச்சேரியில் கல்வி தரம் உயர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாகவும் உள்ளது.