பஸ் கட்டண உயர்வை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்
புதுச்சேரி : புதுச்சேரியில் பஸ் கட்டண உயர்வை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என, அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., கோரிக்கை வைத்துள்ளார்.அவரது அறிக்கை:புதுச்சேரியில் பஸ் கட்டணத்தை குறைந்த பட்சம் 2 லிருந்து 8 ரூபாய் வரை அதிகரித்து அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது ஏழை, எளிய மக்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும். புயல் மற்றும் கனமழையில் இருந்து மக்கள் மீள்வதற்குள் அரசு பஸ் கட்டண உயர்வை அறிவித்திருப்பது, அவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும்.கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு, பொங்கல் என தொடர்ந்து பண்டிகை காலங்கள் வரவுள்ள நிலையில் பஸ் கட்டணம் உயர்ந்திருப்பது போக்குவரத்தைப் பயன்படுத்தும் ஏழை, எளிய மக்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தும்.தமிழக முதல்வர் கிராமப்புறப் பெண்கள் பயனடையும் வகையில் இலவச பஸ் பயணத்தை 3 ஆண்டுகளாக செயல்படுத்தி வருகிறார். புதுச்சேரியில் இலவச பஸ் பயணத்தை செயல்படுத்தாத என்.ஆர்.காங்., பா.ஜ., கூட்டணி அரசு ஏழை மக்களை பாதிக்கும் வகையில் பஸ் கட்டண உயர்வை அறிவித்திருப்பது கண்டனத்துக்குரியது. எனவே பொதுமக்களின் நலன் கருதி, பஸ் கட்டண உயர்வை அரசு பரிசீலிக்க வேண்டும் என்றார்.