உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / செஷல்ஸ் குடியரசை நிர்மாணித்த புதுச்சேரி தமிழர்கள் அடிமையாக சென்று ஆதிக்கம் செலுத்திய வரலாறு

செஷல்ஸ் குடியரசை நிர்மாணித்த புதுச்சேரி தமிழர்கள் அடிமையாக சென்று ஆதிக்கம் செலுத்திய வரலாறு

உலக அளவில் சுற்றுலாவுக்கு பெயர் போனது செஷல்ஸ். இது 115 தீவுகளைக் கொண்ட ஒரு தீவுக்கூட்ட நாடு.இந்தியப் பெருங்கடலில் புள்ளிகளாக அமைந்துள்ளது. இந்த நாடு சுற்றுலா, குறிப்பாக அதன் கிரானைட் மற்றும் பவளப்பாறைத் தீவுகள், அழகிய கடற்கரைகள் மற்றும் கடல் வாழ் உயிரினங்களுக்காகப் பிரபலமானது. இந்த செஷல்ஸ் தீவுக்கும் புதுச்சேரிக்கும் நெருங்கிய வரலாற்று தொடர்பு உண்டு. இன்னும் சொன்னால் அந்த தீவினை கட்டமைக்க அடித்தளமிட்டவர்கள் புதுச்சேரி தமிழர்கள் தான். நமது தொப்புள் கொடி உறவுகள் இன்னும் இருக்கின்றனர். 18ம் நுாற்றாண்டு வரை இங்கு மனிதர்கள் இல்லை. பின்னர் ஆளில்லா இத்தீவில் ஐரோப்பியர்கள் ஆப்ரிக்கர்களை கொத்தடிமைகளாகக் கொண்டு வந்து இந்த தீவை புனரமைத்தனர். செஷல்ஸ் என்றழைப்பதற்கு சுவராசியமான பின்னணி உண்டு. 1756ம் ஆண்டு கீர் என்ற கிழக்கிந்திய கம்பெனி கப்பலின் தளபதி நிகோலஸ் மொர்பே தனது கப்பல்களுடன் இந்துமகா சமூத்திரத்தில் முகாமிட்டார். அப்படியே தீவுக் கூட்டங்களை கைப்பற்றி அதனை தனது நாட்டு அரசரான 15ம் லுாயிக்காக அர்ப்பணித்தார்.அந்த தீவிற்கு பிரான்சின் தலைமை தணிக்கை அதிகாரியான செஷல்சின் பெயரிட்டார். 15 ஆண்டுகளுக்கு பிறகு 1770 ஆகஸ்ட் மாதம் புதுச்சேரியில் இருந்து தெலெமாக் என்ற கப்பல் செஷல்ஸ் நோக்கி புறப்பட்டது. இதில் பிராயர் தெ பாரே என்ற பொறியாளர் உள்பட 28 பேரை சேந்த்தான் என்ற சிறு தீவில் இறக்கிவிட்டது. அதில் வணிகர்களும் அடிமைகளாக 15 வெள்ளையர்கள், எட்டு ஆப்பிரிக்கர்கள், 5 இந்தியர்கள் அடங்கி இருந்தனர். அவர்கள் அந்த ஆளரவமற்ற தீவில் தங்கி காட்டு மரங்களை வெட்டி புதுச்சேரியின் கட்டுமானங்களுக்கு அனுப்பி வந்தனர். மர வியாபாரம் சிறப்பாக நடந்ததால் அங்கேயே தங்கி, தங்களது குடும்பங்களையும் கூடவே அழைத்துக்கொண்டனர். அவர்களது அயராத உழைப்பினால் தான் அந்த தீவுக்கூட்டம் பிறகு, செஷல்ஸ் என்ற நாடாகவும் உருவெடுத்தது. புதுச்சேரியில் இருந்து சென்ற ஐந்து பேரில் சாரி, முத்து, மன்னாதே, கோவிந்து, தொமைங்கி ஆகியோர் செஷல்ஸ் நாட்டை நிர்மாணித்த முதல் குடியேற்றவாசிகள். 1870ல் பிள்ளை, நாயகர், செட்டி, படையாட்சி, நாயுடு, ராசன், ஆறுமுகம் என்ற வணிக குடும்பங்களாக செழித்து மர வணிகர்களாக வளர்ந்து விட்டனர். 19 ம் நுாற்றாண்டில் பிரிட்டனின் காலனி ஆதிக்கத்தில் இருந்த செஷல்ஸ் தீவுகள், நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் 1976ம் ஆண்டு விடுதலை பெற்று செஷல்ஸ் குடியரசாக மாறியது. பின்னர் பிரிட்டனின் காமன்வெல்த் நாடுகளில் ஒன்றாகச் சேர்க்கப்பட்டது. புதுச்சேரி மண்ணின் மைந்தர்கள் நிர்மாணித்த செஷல்ஸ் குடியரசு இன்றைக்கு உலக சுற்றுலா வரைப்படத்தில் முக்கியத்துவமான இடத்தில் உள்ளது. புதுச்சேரியில் இருந்து அடிமையாக சென்றவர்கள் செஷல்ஸ் குடியரசில் இன்றைக்கு ஆட்சியிலும் கோலோச்சுகின்றனர். இது நமக்கு பெருமை தானே.....


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ