அரும்பார்த்தபுரம் புதிய பைபாஸ் சாலையில் தொடரும் வழிப்பறி
வில்லியனுார்: அரும்பார்த்தபுரம் புதிய பைபாசில் மின் விளக்கு வசதி இல்லாததால் இரவு நேரங்களில் வழிப்பறி சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது.கண்டமங்கலம் அருகே உள்ள நவமல்கப்பேர் கிராமத்தை சேர்ந்தவர் துரைராஜ்,54; புதுச்சேரியில் தனியார் பாரில் கேண்டீன் நடத்தி வருகிறார். இவர், கடந்த 14ம் தேதி நள்ளிரவு 11:45 மணியளவில் பணியை முடித்துக்கொண்டு கேண்டீன் வசூல் பணத்துடன் வீட்டிற்கு செல்ல 100 அடி சாலையில், புதிய பைபாஸ் வழியாக வில்லியனுார் நோக்கி சென்று கொண்டிருந்தார். அரும்பார்த்தபுரம் ஆர்.கே. நகர் பகுதியில் சென்றபோது பின்னால் பைக்கில் வந்த இரு மர்ம நபர்கள் துரைராஜை வழிமறித்து அவரிடம் இருந்த 21 ஆயிரத்தை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனர். துரைராஜ் கொடுத்த புகாரின் பேரில், வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து, மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.புதிய பைபாசில் மின் விளக்கு வசதிகள் இல்லாததால் இதுபோன்ற வழிப்பறி சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. புதுச்சேரி அரசு பொதுமக்கள் நலன் கருதி புதிய பைபாசில் மின் விளக்கு வசதி ஏற்படுத்தி கொடுக்க முன் வரவேண்டும்.அதேபோல், வில்லியனுார் மற்றும் ரெட்டியார்பாளையம் போலீசார் இணைந்து பைபாசில் இரவு ரோந்து செல்ல வேண்டும்.