கைதிகள் போராட்டம் எதிரொலி 2 பேர் ஏனாம் சிறைக்கு மாற்றம்
புதுச்சேரி: காலாப்பட்டு மத்திய சிறையில் கைதிகள் போராட்டம் காரணமாக ஆயுள் கைதிகள் இருவர் ஏனாம் சிறைக்கு மாற்றப்பட்டனர்.புதுச்சேரி,காலாப்பட்டு மத்திய சிறையில் 250க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன் பரோல்விடுமுறையில் சென்ற தண்டனை கைதி கருணா, திடீரென தலைமறைவானார்.இதுகுறித்து சிறை நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார், கருணாவை கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்தனர். இச்சம்பவத்தை தொடர்ந்து, பரோல் கொடுக்க சிறை நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தனர். இதனைக் கண்டித்து, தண்டனை கைதிகள் சிலர் தாங்கள் செய்து வந்த சமையல் பணிகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டம் சிறையில் உள்ள பிரபல ரவுடி மணிகண்டன் தலைமையில் நடந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, கைதிகளை போராட்டம் செய்ய துாண்டியதாக ஆயுள் தண்டனை கைதிகள் ரவுடி மணிகண்டன், பெருமாள் ராஜா ஆகியோரை நேற்று சிறை நிர்வாகம் அதிரடியாக ஏனாம் சிறைக்கு மாற்ற உத்தரவிட்டது.அதை தொடர்ந்து இரு கைதிகளும் ஏனாம் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.