லோக்சபா தேர்தலையொட்டி, மதுபான கடத்தல்களை தடுக்க புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு கலால் மற்றும்போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் புதுச்சேரி தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது.கலால் துறை ஆணையர் வல்லவன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அமலாக்கத்துறை ஐ.ஜி., மயில்வாகனன், சென்னை சரக எஸ்.பி., செந்தில்குமார், மதுரை சரக எஸ்.பி., சுஜித்குமார், புதுச்சேரி கலால் துறை துணை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ், புதுச்சேரி போலீஸ் எஸ்.பி.க்கள் வீரவல்லவன், பக்தவச்சலம், பழனிவேல், வம்சிதரெட்டி மற்றும் கடலுார், விழுப்புரம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.கூட்டத்தில், தேர்தலில் வாக்காளர்களை கவர மதுபானங்கள் பயன்படுத்துவதை தடுக்கும் நோக்குடன் மது விற்பனை மற்றும் மதுபானங்களை ஏற்றிச்செல்லும் நேரங்களை குறைப்பது, மதுபான விற்பனை கூடங்களை கண்காணிக்க கேமராக்களை பொருத்துதல், மாவட்ட எல்லைகளில் சி.சி.டி.வி., கேமராக்களுடன் கூடிய சோதனை சாவடிகள் அமைத்து கண்காணிப்பை தீவிரப்படுத்துதல், பழைய மது கடத்தல் குற்றவாளிகளை கண்காணிப்பது, மதுபான கடத்தலை தடுக்க எல்லைப்பகுதிகளில் இருசக்கர வாகன ரோந்து ஏற்பாடு செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.புதுச்சேரி தமிழ்நாடு கலால் துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து, மதுபான குற்றங்களை தடுக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை, இரு மாநில அதிகாரிகளுக்கு இடையே துரிதமான பிரத்யேக தகவல் பரிமாற்றங்கள் ஏற்படுத்த தனி அலுவலர்கள் நியமித்தல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.