| ADDED : டிச 05, 2025 05:05 AM
புதுச்சேரி: கடற்கரையோர மீனவ கிராமங்களில் துாண்டில் முள் வளைவு அமைக்க மத்திய அரசு உதவி செய்ய வேண்டும் என, வைத்திலிங்கம் எம்.பி., கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர், லோக்சபாவில் நேற்று பேசியதாவது: புதுச்சேரியில் கடந்த மாதம் ஏற்பட்ட புயல் தாக்கம் காரணமாக கனமழை பெய்தது. இதனால், கடல் அரிப்பு ஏற்பட்டு மீனவ கிராமங்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, சோலைநகர், சின்ன காலாப்பட்டு, பெரிய காலாப்பட்டு, கனகசெட்டிக்குளம், பிள்ளைச்சாவடி போன்ற பகுதிகள் கடல் அரிப்பில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த பகுதிகளில் உள்ள மீனவர்களை பாதுகாக்க வேண்டும் என்று சொன்னால் அங்கு, 'துாண்டில் முள் வளைவு' என்ற கடல் பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். புதுச்சேரி மாநில அரசால் அதனை செய்ய முடியாததால், மத்திய அரசு அதில் தலையிட்டு உதவி செய்ய வேண்டும் என, கேட்டுக் கொள்கிறேன்.