விஸ்வ ஹிந்து பரிஷத் சீனியர் எஸ்.பி. யிடம் புகார்
புதுச்சேரி : புதுச்சேரி விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர், வைரமுத்து மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீனியர் எஸ்.பி.,யிடம் புகார் அளித்தனர். சென்னையில் கடந்த வாரம் நடந்த கம்பன் விழாவில் கலந்து கொண்ட வைரமுத்து, ராமரை பற்றி அவதூராக பேசினார். இதற்கு தமிழக பா.ஜ., இந்து முன்னனி மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் வைரமுத்துவிற்கு எதிராக போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுச்சேரி மாநில விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் சீனியர் எஸ்.பி., புகார் மனுவை அளித்தனர். மாநில தலைவர் ஞானகுரு, நிர்வாகிகள் இளங்கோ நந்தகுமார், செந்தில் குமரன் லஷ்மி, முருகன், பாலு ஆகியோர் உடனிருந்தனர்.