என்.ஆர்.ஐ., சீட்டுகளில் போலி சான்றிதழ் பட்டியலை வெளியிட போர்க்கொடி
புதுச்சேரி: சென்டாக் என்.ஆர்.ஐ., சீட்டுகளில் போலி சான்றிதழ் கொடுத்த மாணவர்களின் பட்டியலை வெளியிட்டு, அவர்கள் மீது எப்.ஐ.ஆர்., பதிய வேண்டும் என பெற்றோர், மாணவர்கள் அமைப்புகள் போர்கொடி உயர்த்தியுள்ளன.புதுச்சேரி அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் என்.ஆர்.ஐ., இட ஒதுக்கீடாக 116 இடங்கள் உள்ளது. குறிப்பாக புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லுாரியில் என்.ஆர்.ஐ., ஒதுக்கீடாக போகும் 27 மருத்து இடங்கள் உள்ளன.இந்த என்.ஆர்.ஐ., சீட்டுகளில் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் பிள்ளைகள் அதிக கட்டணத்தில் சேர்ந்து படிக்கலாம். அவர்களது நேரடி உறவினர்களின் பிள்ளைகளுக்கும் என்.ஆர்.ஐ., சீட்டுகளை பெற பரிந்துரை செய்யலாம்.ஆனால், என்.ஆர்.ஐ., சீட்டுகளில் போலி சான்றிதழ்கள் கொடுத்து சேர்ந்தாக பெற்றோர், மாணவர்கள் கடந்த வாரம் கவர்னர், முதல்வருக்கு புகார் அனுப்பி இருந்தனர். ஆனாலும் இன்னும் இந்த போலி சான்றிதழ் கொடுத்த மாணவர்கள் மீது நடவடிக்கை இல்லை. அவர்களை நீக்கிய பட்டியலும் வெளியிடவில்லை. இது பெற்றோர், மாணவர்கள் மத்தியில் கொந்தளிப்பினை ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பாக, கவர்னர், முதல்வருக்கு புகார் அனுப்பி உள்ளன. இது குறித்து சென்டாக் மாணவர் பெற்றோர் சங்க தலைவர் நாராயணசாமி கூறியதாவது:என்.ஆர்.ஐ., மாணவர் சேர்க்கையில் போலி ஆவணங்கள் கொடுத்து 3-ம் கட்ட கலந்தாய்வில் மாணவர் சேர்க்கை தேர்ச்சிப்பட்டியலில் இடம் பெற்று போலி ஆவணங்கள் கொடுத்து சேர முயற்சித்த மாணவர்கள் பட்டியலை வெளியிட வேண்டும். அவர்களது பெற்றோர்களை கைது செய்ய வேண்டும்.என்.ஆர்.ஐ., சான்றிதழ் தயார் செய்து கொடுத்த இடைத்தரகர்களையும் கைது செய்து இதில் யார் யார் உடந்தை என்பதையும் வெளியிட்டு அவர்களையும் கைது செய்ய வேண்டும். போலி சான்றிதழ்கள் கொடுத்து சேர முயற்சித்த மாணவர்கள் 3- கட்ட கலந்தாய்விற்கு கட்டிய முன் பணத்தை எந்த காரணமும் காட்டி திரும்ப கொடுக்க கூடாது.அதேப்போன்று முதல் சுற்று இரண்டாம் சுற்றில் சேர்ந்த என்.ஆர்.ஐ., மாணவர்களும் போலி சான்றிதழ்கள் கொடுத்து சேர்ந்திருக்கும் சூழ்நிலை உருவாகி இருக்கும். அதனால் 1மற்றும் 2-ஆம் கட்ட கலந்தாய்வில் சேர்ந்த அனைத்து மாணவர்களின் சான்றிதழ்களையும் மீண்டும் தனிக்குழு மூலம் சரிபார்க்க வேண்டும். இது தொடர்பாக கவர்னர், முதல்வர், துறை அமைச்சர், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.