கடல் பயணம் முடித்து திரும்பிய மாணவர்களுக்கு வரவேற்பு
புதுச்சேரி : சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, கடல் பயணத்தை முடித்து கொண்டு புதுச்சேரி திரும்பிய என்.சி.சி., மாணவர்களை கவர்னர் கைலாஷ்நாதன் வரவேற்றார்.புதுச்சேரி என்.சி.சி., சார்பில், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, கடல் பாதுகாப்பின் முக்கியத்தும் உள்ளிட்டவையை வலியுறுத்தி, கடந்த 11ம் தேதி, புதுச்சேரியில் இருந்து கடல் பயணம் செய்தனர். அதில், 25 பெண் என்.சி.சி., கேடட்டுகள் உட்பட 60 என்.சி.சி., மாணவர்கள் பயணத்தை துவக்கினர்.இந்த லட்சிய பயணத்துடன், இளம் என்.சி.சி, கேடட்களிடையே தலைமைத்துவம், சாகசம் மற்றும் ஆய்வு மனப்பான்மையை வளர்ப்பதற்கான ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி பயணத்தை துவக்கினர். இந்த கடல் பயணம், 10 நாட்களில் 302 கி.மீ., துாரத்தை மாணவர்கள் சென்றனர்.இந்தப் பயணத்தில் கடலுார், பரங்கிப்பேட்டை, பூம்புகார் மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் வழியாக, பல்வேறு கடல்சார் சூழல்களை பார்வையிட்டனர். இதில், அவசரகால நடைமுறைகள், உயிர்வாழும் திறன்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.இந்நிலையில், மாணவர்கள் கடல் பயணத்தை முடித்து கொண்டு, நேற்று புதுச்சேரி தேங்காய்த்திட்டு துறைமுகத்திற்கு திரும்பினர். அவர்களை, கவர்னர் கைலாஷ்நாதன் வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில், பாஸ்கர் எம்.எல்.ஏ., என்.சி.சி., துணை இயக்குநர் உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.