உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரியில் உயிரியல் பூங்கா அமையுமா? சுற்றுலா வளர்ச்சிக்கு வாய்ப்பு

புதுச்சேரியில் உயிரியல் பூங்கா அமையுமா? சுற்றுலா வளர்ச்சிக்கு வாய்ப்பு

புதுச்சேரி - கடலுார் சாலையில் நீதிமன்ற வளாகம் அருகில் புதுச்சேரி வனத்துறை அலுவலகம் உள்ளது. இந்த பகுதியில் 2 ஏக்கர் பரப்பளவில் வனத்துறை அலுவலகமும், அதையொட்டி, 25 ஏக்கர் பரப்பளவில் வனப்பகுதியும் உள்ளது.வனத்துறை அலுவலக வளாகத்தில் வன விலங்குகள் மறுவாழ்வு மையம் உள்ளது. இங்கு, தற்போது 20க்கும் மேற்பட்ட மான்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் அடிபட்ட நிலையில் சிக்கும் பாம்புகள், குரங்கு, மயில், நரி, முள்ளம்பன்றி, வாத்து, அணில், மலைப்பாம்பு ஆகியவற்றையும் இங்கு பாதுகாத்து வருகின்றனர். விலங்குகள் கருவுற்று இருந்தால் அவை குட்டி ஈணும் வரை அங்கேயே வைத்து பாதுகாக்கின்றனர். அதன் பிறகு அவை புதர் பகுதிகளில் கொண்டு போய் விட்டு வருகின்றன.ஒரு உயிரியல் பூங்காக்களில் இருப்பது போன்று இங்கு எந்த வித அடிப்படை வசதிகளும் இல்லாத காரணத்தால் குறிப்பிட்ட காலத்திற்கு மேல் விலங்குகள் மற்றும் பறவைகளை வைத்து பராமரிக்க முடிவது இல்லை.புதுச்சேரியில் வன விலங்குகள் சரணாலயம் எதுவும் கிடையாது. இங்குள்ளோர் விலங்குகளைப் பார்க்க சென்னை வண்டலுாரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்குத் தான் செல்ல வேண்டும்.எனவே, புதுச்சேரியில் வன துறை அலுவலக வளாகத்தில் விலங்குகள் உயிரியல் பூங்கா துவங்கினால் சிறந்த சுற்றுலா தலமாக அமையும். சுற்றுலாப் பயணிகளை கவரும்.புதுச்சேரிக்கு வார இறுதி நாட்களில் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் சுண்ணாம்பாறு படகு குழாம், கடற்கரை சாலை, அருங்காட்சியகம், அரவிந்தர் ஆசிரமம், மணக்குள விநாயகர் கோவில், பாரதி மற்றும் பாரதிதாசன் நினைவு இல்லங்கள் ஆகியற்றை சுற்றிப் பார்கின்றனர்.அதை தவிர சுற்றி பார்க்க, பொழுது போக்க வேறு சுற்றுலா தளங்கள் இல்லை. அது போன்ற சூழ்நிலையில் மாநிலத்தில் உயிரியல் பூங்கா அமைத்தால், பல்வேறு மாநில சுற்றுலா பயணிகளின் கவனம் புதுச்சேரி மீது திரும்பும். அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும்.சுதேசி மில் வளாகம் சுற்றுலாபயணிகளை கவரும் விதமாக மேம்படுத்தப்படும். புதுச்சேரியில் சிறு வன உயிரியல் பூங்கா அமைக்கப்படும் என்று மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்டது.ஆனால் வன உயிரியல் பூங்கா அமைக்க நிதி ஒதுக்கீடு எதுவும் செய்யப்படவில்லை. எனவே, இது தொடர்பாக மத்திய வனத் துறை அமைச்சகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று, புதுச்சேரியில் உயிரியல் பூங்கா அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி