உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / பவுலர்கள் பாடு திண்டாட்டம்: என்ன சொல்கிறார் அஷ்வின்

பவுலர்கள் பாடு திண்டாட்டம்: என்ன சொல்கிறார் அஷ்வின்

புதுடில்லி: ''நவீன கால அதிரடி 'பேட்டிங்' வியக்க வைக்கிறது. பவுலர்கள் பாடு திண்டாட்டமாக உள்ளது,'' என அஷ்வின் தெரிவித்தார்.கிரிக்கெட்டில் மைதானங்கள் குறிப்பிட்ட அளவில் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு கிடையாது. நியூசிலாந்தில் சின்னதாக இருக்கும். இந்தியாவின் ஈடன் கார்டன், மோடி மைதானம், ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன், லண்டன் லார்ட்ஸ் போன்றவை பெரிய மைதானமாக இருக்கும். 'டி-20' போட்டி வரவுக்கு பின் அனைத்து மைதானங்களிலும் பேட்டர்கள் ரன் மழை பொழிகின்றனர்.ஐ.பி.எல்., அரங்கில் (2008-2023) இரு முறை (பெங்களூரு- 263/5 எதிர், புனே, 2013, லக்னோ- 257/5 எதிர், பஞ்சாப், 2023) மட்டுமே 250 ரன்னுக்கு மேல் எடுக்கப்பட்டன. தற்போதைய ஐ.பி.எல்., தொடரில் 8 முறை 250 ரன்னுக்கு மேல் எடுக்கப்பட்டுள்ளன. இதில் ஐதராபாத் அணி அதிபட்சமாக 287 ரன் குவித்து சாதனை படைத்தது. பேட்டர்கள் முழு ஆதிக்கம் செலுத்துகின்றனர்.இது குறித்து இந்திய அணியின் அனுபவ 'ஸ்பின்னரும்' ராஜஸ்தான் அணி வீரருமான அஷ்வின் 37, கூறியது: நவீன கால அதிரடி 'பேட்டிங்' நம்ப முடியாத அளவுக்கு பிரம்மிப்பாக உள்ளது. மைதானத்தின் அளவை எல்லாம் பொருட்படுத்துவதில்லை. 'ஸ்பானர்சர்கள்' எல்இடி விளம்பர பலகை பயன்படுத்துவதால், எல்லை கோட்டின் அளவை குறைத்து விட்டனர். மைதானங்களின் பவுண்டரி அளவும் மாறுபடுகிறது.

மாறும் துாரம்

ஜெய்ப்பூர் சவாய் மான் சிங் மைதானத்தின் பவுண்டரி துாரம் ரொம்ப அதிகம். ஜாலியாக சொல்ல வேண்டுமானால், எனது வயதில் இங்குள்ள பவுண்டரியை தொட சைக்கிளில் தான் செல்ல வேண்டும். அடுத்த மைதானத்தில் நடந்து சென்றாலே பவுண்டரியை எட்டி விடலாம் என உணர்ந்தேன். இன்னொரு மைதானத்தில் சும்மா ஓடினாலே போதும் என்ற நிலை இருந்தது. மற்றொரு மைதானத்தின் பவுண்டரி அளவு, நான் 'பபுள் கம்மை' மென்று துப்பினால், அது எல்லை கோட்டை கடந்து சிக்சருக்கான இடத்தில் விழும் அளவுக்கு மிகவும் குறைவாக இருந்தது.

ரசிகர்கள் விருப்பம்

பேட்டர்களின் ஆதிக்கம் தொடர்ந்தால், கிரிக்கெட் ஒருதலைபட்சமான போட்டியாக மாறிவிடும். பவுலர்கள் தவிக்க நேரிடும். இவர்களுக்கு மனதளவில் ஊக்கம் தேவைப்படும். சிறப்பாக பந்துவீசுபவர்களும் உள்ளனர். மைதானத்திற்கு ரசிகர்கள் வருவது பவுண்டரி, சிக்சர்களை பார்க்க தான் என்ற உண்மையையும் ஏற்க வேண்டும்.இவ்வாறு அஷ்வின் கூறினார்.

மவுசு அதிகம்

ராஜஸ்தான் அணியின் பவுலிங் பயிற்சியாளர் ஷேன் பாண்ட் கூறுகையில்,''சிறப்பாக பந்துவீசுபவருக்கு நல்ல மவுசு உள்ளது. அதிக சம்பளம் பெறலாம். பேட்டிங்கை போல பவுலிங்கிலும் மாற்றம் ஏற்படும்,''என்றார்

'அப்பா' தோனி

சென்னை அணிக்காக விளையாடும் இலங்கை 'வேகப்புயல்' பதிரானா 21, கூறுகையில்,''எனது கிரிக்கெட் வாழ்க்கையில் அப்பா போல திகழ்கிறார் தோனி. களத்தில் சின்ன சின்ன விஷயங்களை சொல்வார். அது என்னுள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். அவரது 'அட்வைஸ்' தன்னம்பிக்கையை அதிகரிக்க செய்யும். சென்னை அணிக்காக தோனி 42, அடுத்த ஆண்டும் விளையாட வேண்டும்,''என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Vasudevan
மே 06, 2024 03:41

அஸ்வின் நீங்கள் டெஸ்ட் மேட்ச் மட்டும் விளையாடினால் இன்னும் - வருடம் விளையாடலாம் T உங்களுக்கு ஏற்றதல்ல ???Time to say good bye to T


மேலும் செய்திகள்