சதம் விளாசினார் விஹான்
செல்ம்ஸ்போர்டு: இங்கிலாந்து சென்றுள்ள 19 வயதுக்குட்பட்ட இந்திய அணி, இரண்டு போட்டி கொண்ட 'யூத்' டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி 'டிரா' ஆனது. இரண்டாவது டெஸ்ட் செல்ம்ஸ்போர்டில் நடக்கிறது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 309 ரன் எடுத்தது. இரண்டாவது நாள் முடிவில் இந்திய அணி 51/1 ரன் எடுத்திருந்தது. நேற்று மூன்றாவது நாள் ஆட்டம் நடந்தது. இந்திய அணி கேப்டன் ஆயுஷ் மாத்ரே, விஹான் மல்கோத்ரா வேகமாக ரன் சேர்த்தனர். ஆயுஷ் அரைசதம் கடந்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு 133 ரன் சேர்த்த போது ஆயுஷ், 80 ரன்னில் (90 பந்து) அவுட்டானார். இதன் பின் இந்திய வீரர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர்.மறுபக்கம் மனம் தளராத விஹான், சதம் கடந்தார். இவர் 123 பந்தில் 120 ரன் எடுத்து அவுட்டானார். ஹர்வன்ஷ் 28 ரன் எடுத்தார். மற்ற யாரும் ஒற்றை இலக்க ரன்களை தாண்டவில்லை. இந்திய அணி முதல் இன்னிங்சில் 279 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி, 30 ரன் பின்தங்கியது. இங்கிலாந்தின் ரால்பை ஆல்பர்ட் 6 விக்கெட் சாய்த்தார்.அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 80 எடுத்து, 110 ரன் முன்னிலை பெற்றிருந்தது.