இந்திய பெண்கள் அணி முன்னிலை * ராகவி, ஷைபாலி அரைசதம்
பிரிஸ்பேன்: பிரிஸ்பேன் டெஸ்டில் இந்தியாவின் ராகவி, ஷைபாலி அரைசதம் கடந்தனர்.ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய பெண்கள் 'ஏ' அணி, ஆஸ்திரேலியா 'ஏ' அணியுடன் அதிகாரப்பூர்வமற்ற 4 நாள் கொண்ட டெஸ்டில் பங்கேற்கிறது. இப்போட்டி பிரிஸ்பேனில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இந்திய பெண்கள் 'ஏ' அணி 299 ரன் எடுத்தது. இரண்டாவது நாள் முடிவில் ஆஸ்திரேலிய 'ஏ' அணி முதல் இன்னிங்சில் 158/5 ரன் எடுத்து, 141 ரன் பின்தங்கி இருந்தது.நேற்று மூன்றாவது நாள் ஆட்டம் நடந்தது. 6வது விக்கெட்டுக்கு 102 ரன் சேர்த்த போது, அரைசதம் அடித்த நிக்கோல் (54) அவுட்டானார். சியான்னா, 103 ரன்னில் அவுட்டாக, ஆஸ்திரேலிய 'ஏ' அணி முதல் இன்னிங்சில் 305 ரன்னில் ஆல் அவுட்டானது.இந்திய அணி 6 ரன் பின்தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்சை துவக்கியது. ஷைபாலி (52), தாரா (20), தேஜல் (39) கைகொடுத்தனர். தனுஸ்ரீ 25 ரன் எடுத்தார். ராகவி (86) அணியின் ஸ்கோரை உயர்த்தினார். மூன்றாவது நாள் முடிவில் இந்திய பெண்கள் 'ஏ' அணி, இரண்டாவது இன்னிங்சில், 8 விக்கெட்டுக்கு 260 ரன் எடுத்து, 254 ரன் முன்னிலை பெற்றிருந்தது. ஜோஷிதா (9), திதாஸ் (2) அவுட்டாகாமல் இருந்தனர்.