லண்டன்: லார்ட்ஸ் டெஸ்டில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ், 114 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இங்கிலாந்து சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் 121, இங்கிலாந்து 371 ரன் எடுத்தன. இரண்டாம் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2வது இன்னிங்சில் 79/6 ரன் எடுத்திருந்தது.மூன்றாம் நாள் ஆட்டத்தில் ஆண்டர்சன் பந்தில் ஜோஷுவா டா சில்வா (9) அவுட்டானார். அட்கின்சன் 'வேகத்தில்' அல்சாரி ஜோசப் (8), ஷாமர் ஜோசப் (3), ஜெய்டன் சீல்ஸ் (8) வெளியேறினர். வெஸ்ட் இண்டீஸ் அணி 2வது இன்னிங்சில் 136 ரன்னுக்கு சுருண்டு இன்னிங்ஸ் தோல்வியடைந்தது. குடகேஷ் மோதி (31) அவுட்டாகாமல் இருந்தார். இங்கிலாந்து சார்பில் அட்கின்சன் 5, ஆண்டர்சன் 3, ஸ்டோக்ஸ் 2 விக்கெட் சாய்த்தனர்.இரு இன்னிங்சிலும் சேர்த்து 12 விக்கெட் (7+5) இங்கிலாந்தின் அட்கின்சன், ஆட்ட நாயகன் விருது வென்றார். இரண்டாவது டெஸ்ட் ஜூலை 18ல் நாட்டிங்காமில் துவங்குகிறது.
அசத்தல் அறிமுகம்
வேகத்தில் அசத்திய இங்கிலாந்தின் அட்கின்சன் (12 விக்கெட், 106 ரன், 26 ஓவர்), அறிமுக டெஸ்டில் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்த பவுலர்கள் பட்டியலில் 4வது இடம் பிடித்தார். முதல் மூன்று இடங்களில் இந்தியாவின் ஹிர்வானி (16 விக்கெட், 136 ரன், 33.5 ஓவர், எதிர்: வெஸ்ட் இண்டீஸ், 1988, சென்னை), ஆஸ்திரேலியாவின் ரால் மாஸி (16 விக்கெட், 137 ரன், 60.1 ஓவர், எதிர்: இங்கிலாந்து, 1972, லார்ட்ஸ்), இங்கிலாந்தின் மார்டின் (12 விக்கெட், 102 ரன், 57.2 ஓவர், எதிர்: ஆஸி., 1890, ஓவல்) உள்ளனர்.