உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / அசராமல் பந்துவீசிய அஞ்சாத சிராஜ்

அசராமல் பந்துவீசிய அஞ்சாத சிராஜ்

லண்டன்: டெஸ்ட் தொடர் முழுவதும் 'வேகப்புயல்' சிராஜ் பெயர் ஒலித்துக் கொண்டே இருந்தது. ரோகித், கோலி, அஷ்வின் ஓய்வு பெற்ற நிலையில், இந்திய அணி பும்ராவை அதிகம் சார்ந்திருந்தது. முதுகுவலி காரணமாக பும்ரா 3 போட்டியில் மட்டுமே பங்கேற்க முடிந்தது. இந்தச் சூழலில் அணியின் சுமையை முழுமையாக ஏற்றார் சிராஜ். அசராமல் பந்துவீசி, இங்கிலாந்து அணியை சிதறடித்தார். 5 டெஸ்டிலும் பங்கேற்றார். 1113 பந்துகள், 185.3 ஓவர் வீசி, 23 விக்கெட்டுகள் கைப்பற்றி, முதலிடம் பிடித்தார்.லார்ட்சில் நடந்த 3வது டெஸ்டில் சோயப் பஷிர் பந்து பட்டு சிராஜ் துரதிருஷ்டவசமாக போல்டாக, இந்திய அணி 22 ரன்னில் தோற்றது. இந்த அதிர்ச்சியில் இருந்து மீண்ட இவருக்கு இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது. ஓவல் டெஸ்டின் நான்காவது நாள் ஆட்டத்தில் புரூக் கொடுத்த 'கேட்ச்சை' எல்லையில் நழுவவிட்டார். அப்போது 19 ரன்னில் இருந்த புரூக், இறுதியில் 111 ரன் குவித்தார். இதையும் கடந்த சிராஜ், அணிக்காக ஓவர் மேல் ஓவர் வீசினார். நேற்று அட்கின்சனை அவுட்டாக்கியதும், போர்ச்சுகல் கால்பந்து வீரர் ரொனால்டோ 'ஸ்டைலில்' வெற்றியை கொண்டாடினார். நாட்டுக்காக...சிராஜ் கூறுகையில்,''எனது உடல்நிலை சிறப்பாக உள்ளது. தொடர்ந்து 6 அல்லது 9 ஓவர் கூட வீசு தயார். எனக்காக பந்துவீசவில்லை. நாட்டுக்காக பந்துவீசுகிறேன். நேற்று காலை எழுந்ததும் எனது அலைபேசியில் 'கூகுள்' பண்ணி பார்த்தேன். 'உன்னை நம்பு' என்று உணர்த்திய 'இமோஜியை' தேர்வு செய்து ரொனால்டோ படத்துடன் 'வால்பேப்பராக' வைத்தேன். என்னால் வெற்றி தேடித்தர முடியும் என நம்பினேன். சரியான இடத்தில் துல்லியமாக பந்துவீசுவதே இலக்காக இருந்தது. இறுதியில் வென்றது மகிழ்ச்சி அளித்தது.இப்போட்டியில் புரூக் கொடுத்த 'கேட்ச்சை' பிடித்த போது எனது கால், பவுண்டரியை தொட்டதாக உணரவில்லை. எனது தவறு ஆட்டத்தை மாற்றும் தருணமாக அமைந்தது. புரூக் 'டி-20' போல அடித்து விளையாடிய போது, போட்டி எங்களது கையைவிட்டு போனதாக நினைத்தேன். பின் எல்லாம் இந்தியாவுக்கு சாதகமாக மாறியது. இதற்காக கடவுளுக்கு நன்றி,''என்றார்.கேப்டன் விரும்பும் வீரர்சிராஜ் எப்போதும்,'பும்ரா மீது நம்பிக்கை உண்டு. ஆட்டத்தை மாற்றும் திறன் பெற்ற பவுலர்,'என குறிப்பிடுவார். இவரது வார்த்தைகளை கொஞ்சம் மாற்றிய கேப்டன் சுப்மன் கில் கூறுகையில்,''நாங்கள் எப்போதும் சிராஜை நம்புகிறோம். கேப்டன் விரும்பும் கனவு நாயகனாக திகழ்கிறார். களத்தில் கடினமாக உழைத்தார். பிரசித் கிருஷ்ணா, சிராஜ் போன்றோர் அசத்தியதால், எனது கேப்டன் பணி எளிதானது. இந்த தொடரில் சிறந்த பேட்டராக ஜொலிக்க வேண்டுமென விரும்பினேன். இதன்படி அதிக ரன் குவித்தது திருப்தி அளித்தது,''என்றார்.புரூக் ஏமாற்றம்இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் கூறுகையில்,''நானும் ஜோ ரூட்டும் சேர்ந்து 4வது விக்கெட்டுக்கு 195 ரன் சேர்த்தோம். எளிதாக வெல்வோம் என நினைத்தேன். ஆனால், சிராஜ் அருமையாக பந்துவீசி திருப்பம் ஏற்படுத்தினார். வெற்றியை நழுவவிட்டது பெரும் ஏமாற்றம் அளித்தது,''என்றார்.பதவி உயர்வுஇந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறுகையில்,''ஓவல் டெஸ்ட் வெற்றி நாயகனாக சிராஜ் ஜொலித்தார். தெலுங்கானாவில் டி.எஸ்.பி., அந்தஸ்தில் உள்ள இவருக்கு பதவி உயர்வு கிடைப்பது நிச்சயம்,''என்றார்.கவாஸ்கர் ராசிஓவல் டெஸ்ட் போட்டிக்கு இடையே இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கவாஸ்கர், கேப்டன் சுப்மன் கில்லை சந்தித்தார். இத்தொடரில் அதிக ரன் குவித்ததற்காக பிரத்யேக கேப், 'டி-சர்ட்' பரிசாக அளித்தார். அப்போது, '2021ல் காபா டெஸ்டில் (எதிர், ஆஸி.,) இந்தியா வென்ற தருணத்தில் அணிந்த அதே வெள்ளை நிற ராசியான ஜாக்கெட்டை ஓவல் டெஸ்டிலும் அணிந்து வர உள்ளேன்,'என்றார். நேற்று இந்தியா வென்றதும் தனது உடையை சுட்டிக்காட்டிய கவாஸ்கர், 'லக்கி ஜாக்கெட்' என கூறி மகிழ்ந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி