| ADDED : பிப் 13, 2024 10:45 PM
மும்பை: ரஞ்சி கோப்பை தொடரில் விளையாடினால் மட்டுமே, ஐ.பி.எல்., ஏலத்தில் பங்கேற்க முடியும். இந்திய அணி இளம் விக்கெட் கீப்பர் இஷான் கிஷான் 25. பல்வேறு தொடர்களுக்கான அணியில் இடம் பெற்ற போதும், விளையாடும் லெவன் அணியில் போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த அதிருப்தியில், தென் ஆப்ரிக்க தொடரில் இருந்து, தானாக ஓய்வு கேட்டு விலகினார். உள்ளூர் தொடரில் பங்கேற்று அசத்தினால் இந்திய அணியில் சேர்க்கப்படுவார் என பயிற்சியாளர் டிராவிட் தெரிவித்து இருந்தார். ஆனால் இஷான் கிஷான் ரஞ்சி கோப்பை தொடரில் பங்கேற்கவில்லை. மாறாக ஐ.பி.எல்., தொடருக்கு தயாராகி வருகிறார். இதையடுத்து இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) புதிய முடிவு எடுத்துள்ளது. இதன்படி, 'இந்திய அணியில் விளையாடாத வீரர்கள், ரஞ்சி கோப்பை தொடரில் குறைந்தபட்சம் ஆண்டுக்கு 3 முதல் 4 போட்டிகளில் கட்டாயம் பங்கேற்க வேண்டும். அப்போது தான் ஐ.பி.எல்., தொடர் ஏலத்தில் வீரர்கள் பங்கேற்க முடியும்,' என தெரிவித்துள்ளது. தவிர இஷான் கிஷான், ஜார்க்கண்ட் அணிக்காக கடைசி ரஞ்சி கோப்பை போட்டியில் விளையாட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து பி.சி.சி.ஐ., மூத்த அதிகாரி ஒருவர் கூறியது:இளம் வீரர்கள் ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்றால் மட்டும் போதும் என நினைக்கின்றனர். சிலர் முதல் தர போட்டிகளில் பங்கேற்பதை விரும்புவது இல்லை. இந்திய அணியில் இல்லாத நேரங்களில் சையது முஷ்தாக் 'டி-20' தொடரில், சில போட்டிகளில் மட்டும் விளையாடுகின்றனர். இதைத் தவிர்க்க, பி.சி.சி.ஐ., விதிகளை கடுமையாக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதனால் ஆண்டுக்கு குறைந்தது 3-4 ரஞ்சி கோப்பை போட்டியில் பங்கேற்க வேண்டும். இல்லை எனில் ஐ.பி.எல்., தொடரில் விளையாட முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.