உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / ஹர்திக் பாண்ட்யா அசத்தல்: வெற்றி நடையை தொடர்ந்த இந்தியா

ஹர்திக் பாண்ட்யா அசத்தல்: வெற்றி நடையை தொடர்ந்த இந்தியா

நார்த் சவுண்ட்: ஹர்திக் பாண்ட்யா 'ஆல்-ரவுண்டராக' அசத்த இந்திய அணி 50 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.வெஸ்ட் இண்டீசின் நார்த் சவுண்டில் (ஆன்டிகுவா) நேற்று நடந்த 'டி-20' உலக கோப்பை 'சூப்பர்-8' போட்டியில் இந்தியா, வங்கதேசம் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற வங்கதேச அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.

பலே பாண்ட்யா

இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா (23) நல்ல துவக்கம் கொடுத்தார். முஸ்தபிஜுர், ரிஷாத் ஹொசைன் பந்தில் தலா ஒரு சிக்சர் விளாசிய விராத் கோலி (37) நம்பிக்கை தந்தார். சூர்யகுமார் யாதவ் (6) சோபிக்கவில்லை. ரிஷாப் பன்ட் (36) ஓரளவு கைகொடுத்தார். சாகிப் அல் ஹசன், தன்சிம், ரிஷாத் பந்தில் தலா ஒரு சிக்சர் அடித்த ஷிவம் துபே, 34 ரன்னில் ஆட்டமிழந்தார். தன்சிம் பந்தை சிக்சருக்கு விளாசிய பாண்ட்யா, முஸ்தபிஜுர் பந்தை பவுண்டரிக்கு அனுப்பி 27 பந்தில் அரைசதம் எட்டினார்.இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 196 ரன் எடுத்தது. பாண்ட்யா (50), அக்சர் (3) அவுட்டாகாமல் இருந்தனர்.

குல்தீப் அசத்தல்

சவாலான இலக்கை விரட்டிய வங்கதேச அணிக்கு லிட்டன் தாஸ் (13) ஏமாற்றினார். குல்தீப் யாதவ் 'சுழலில்' தன்ஜித் ஹசன் (29), தவ்ஹித் (4), சாகிப் அல் ஹசன் (11) சிக்கினர். கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ (40) ஆறுதல் தந்தார். அர்ஷ்தீப் சிங் 'வேகத்தில்' ஜாகர் அலி (1), மகமதுல்லா (13) வெளியேறினர். பும்ரா பந்தில் ரிஷாத் ஹசன் (24) அவுட்டானார்.வங்கதேச அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 146 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. மஹெதி ஹசன் (5), தன்சிம் ஹசன் சாகிப் (1) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் குல்தீப் 3 விக்கெட் சாய்த்தார். ஆட்ட நாயகன் விருதை ஹர்திக் பாண்ட்யா கைப்பற்றினார்.

196 ரன்

'டி-20' உலக கோப்பை அரங்கில் இந்திய அணி தனது 3வது அதிகபட்ச ஸ்கோரை பெற்றது. ஏற்கனவே இங்கிலாந்து (218/4, 2007, இடம்: டர்பன்), ஆப்கானிஸ்தான் (210/2, 2021, இடம்: அபுதாபி) அணிகளுக்கு எதிராக அதிக ரன் குவித்திருந்தது.

13 சிக்சர்

இந்திய வீரர்கள் 13 சிக்சர் அடித்தனர். இதன்மூலம் 'டி-20' உலக கோப்பை அரங்கில் இந்தியா சார்பில் ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் பதிவானது. இதற்கு முன், 2007ல் டர்பனில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 11 சிக்சர் விளாசப்பட்டது.

50 விக்கெட்

ரோகித்தை அவுட்டாக்கிய வங்கதேசத்தின் சாகிப் அல் ஹசன், 'டி-20' உலக கோப்பை அரங்கில் 50 விக்கெட் சாய்த்த முதல் பவுலரானார்.

லாரா தப்புக்கணக்கு

வங்கதேசத்துக்கு எதிராக இந்தியாவின் ரோகித்-கோலி ஜோடி 100 ரன்களுக்கு மேல் சேர்க்கும் என, வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் லாரா கணித்திருந்தார். ஆனால் முதல் விக்கெட்டுக்கு 39 ரன் சேர்த்த நிலையில் ரோகித் அவுட்டாக, லாராவின் கணிப்பு 'மிஸ்' ஆனது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ