| ADDED : ஜூலை 09, 2024 09:48 PM
துபாய்: ஐ.சி.சி., ஜூன் மாத சிறந்த வீரராக பும்ரா, சிறந்த வீராங்கனையாக ஸ்மிருதி மந்தனா தேர்வு செய்யப்பட்டனர்.சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர், வீராங்கனை விருது வழங்கப்படுகிறது. ஜூன் மாத விருது பட்டியலில் இந்தியாவின் பும்ரா, ரோகித் சர்மா, ஆப்கானிஸ்தானின் ரஹ்மானுல்லா குர்பாஸ் இடம் பெற்றிருந்தனர். உலக கோப்பை தொடரில் 15 விக்கெட் சாய்த்து தொடர் நாயகன் ஆன பும்ரா, ஜூன் மாத சிறந்த வீரராக தேர்வானார். பெண்களுக்கான விருது பட்டியலில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா, இங்கிலாந்தின் பவுசியர், இலங்கையின் விஷ்மி இடம் பெற்றனர். இதில் மந்தனா சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டார். தென் ஆப்ரிக்க ஒருநாள் தொடரில் 117, 136, 90 என மொத்தம் 3 போட்டியில் 343 ரன் குவித்து, தொடர் நாயகி ஆனதை அடுத்து, விருதுக்கு தேர்வாகியுள்ளார்.