ஹாமில்டன்: இரண்டாவது டெஸ்டில் வில்லியம்சன் சதம் கடந்து கைகொடுக்க நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை முதன்முறையாக கைப்பற்றி வரலாறு படைத்தது.நியூசிலாந்து சென்ற தென் ஆப்ரிக்க அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் டெஸ்டில் நியூசிலாந்து வென்றது. ஹாமில்டனில் 2வது டெஸ்ட் நடந்தது. முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்கா 242, நியூசிலாந்து 211 ரன் எடுத்தன. தென் ஆப்ரிக்க அணி 2வது இன்னிங்சில் 235 ரன் எடுத்தது. பின் 267 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 3ம் நாள் முடிவில் 40/1 ரன் எடுத்திருந்தது. லதாம் (21) அவுட்டாகாமல் இருந்தார்.
வில்லியம்சன் சதம்
நான்காம் நாள் ஆட்டத்தில் லதாம் (30), ரச்சின் ரவிந்திரா (20) நிலைக்கவில்லை. பின் வந்த வில்லியம்சன் டெஸ்ட் அரங்கில் தனது 32வது சதத்தை பதிவு செய்தார். வில் யங் அரைசதம் விளாசினார். மோரேகி பந்தை பவுண்டரிக்கு விரட்டிய வில்லியம்சன் வெற்றியை உறுதி செய்தார்.நியூசிலாந்து அணி 2வது இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 269 ரன் எடுத்து வெற்றி பெற்றது. வில்லியம்சன் (133), வில் யங் (60) அவுட்டாகாமல் இருந்தனர். நியூசிலாந்து அணி 2-0 என தொடரை கைப்பற்றி கோப்பை வென்றது. ஆட்ட நாயகன் விருதை நியூசிலாந்தின் வில்லியம் ஓ'ரூர்க் வென்றார். தொடர் நாயகன் விருதை நியூசிலாந்தின் வில்லியம்சன் கைப்பற்றினார்.
முதன்முறை
நியூசிலாந்து அணி, 92 ஆண்டு கால டெஸ்ட் வரலாற்றில் முதன்முறையாக தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக தொடரை கைப்பற்றி கோப்பை வென்றது. இவ்விரு அணிகள் 18 முறை டெஸ்ட் தொடரில் பங்கேற்றன. இதில் தென் ஆப்ரிக்கா 13, நியூசிலாந்து ஒரு முறை தொடரை வென்றன. நான்கு முறை தொடர் சமன் ஆனது.
172 இன்னிங்ஸ்
நியூசிலாந்தின் வில்லியம்சன், டெஸ்ட் அரங்கில் குறைந்த இன்னிங்சில் 32 சதம் அடித்த வீரரானார். இவர் 172 இன்னிங்சில் இம்மைல்கல்லை எட்டினார். இதற்கு முன் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் 174 இன்னிங்சில் இச்சாதனை படைத்திருந்தார்.
ஐந்து சதம்
நான்காவது இன்னிங்சில் அதிக சதம் விளாசிய வீரர்கள் வரிசையில் முதலிடத்தை பாகிஸ்தானின் யூனிஸ் கானுடன் பகிர்ந்து கொண்டார் வில்லியம்சன். இருவரும் தலா 5 சதம் அடித்தனர். அடுத்த இடத்தை இந்தியாவின் கவாஸ்கர், ஆஸ்திரேலியாவின் பாண்டிங், வெஸ்ட் இண்டீசின் சர்வான், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் (தலா 4 சதம்) பகிர்ந்து கொண்டுள்ளனர்.
முதலிடம்
தென் ஆப்ரிக்க தொடரை கைப்பற்றிய நியூசிலாந்து அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 75.00 வெற்றி சதவீதத்துடன் முதலிடத்துக்கு முன்னேறியது. இதுவரை 4 டெஸ்டில் 3 வெற்றி, ஒரு தோல்வியை பெற்றது. அடுத்த இரு இடங்களில் ஆஸ்திரேலியா (55.00 வெற்றி சதவீதம்), இந்தியா (52.77) உள்ளன.