உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / விக்கெட் கீப்பராக ரிஷாப் பன்ட்: யுவராஜ் சிங் விருப்பம்

விக்கெட் கீப்பராக ரிஷாப் பன்ட்: யுவராஜ் சிங் விருப்பம்

துபாய்: ''உலக கோப்பை ('டி-20') தொடருக்கான இந்திய 'லெவன்' அணியில் விக்கெட் கீப்பர் இடத்துக்கு ரிஷாப் பன்ட் தேர்வு செய்யப்பட வேண்டும்,'' என, யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்காவில் ஐ.சி.சி., 'டி-20' உலக கோப்பை 9வது சீசன் ஜூன் 2ல் துவங்குகிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. இந்திய அணி 'ஏ' பிரிவில் பாகிஸ்தான், கனடா, அயர்லாந்து, அமெரிக்க அணிகளுடன் இடம் பிடித்துள்ளது. இத்தொடரின் விளம்பர துாதுவராக இந்திய அணி முன்னாள் 'ஆல்-ரவுண்டர்' யுவராஜ் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.இந்திய அணி தேர்வு குறித்து யுவராஜ் கூறியது: சர்வதேச போட்டிகளில் வீரர்களின் செயல்பாட்டை அடிப்படையாக கொண்டு 'டி-20' உலக கோப்பைக்கு இந்திய அணி தேர்வு செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி. ஐ.பி.எல்., தொடரில் வீரர்களின் பங்களிப்பை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. ஒருவேளை அப்படி செய்திருந்தால் ஐ.பி.எல்., போட்டியில் ஏமாற்றிய ஹர்திக் பாண்ட்யா தேர்வு செய்யப்பட்டிருக்க மாட்டார். சர்வதேச போட்டியில் சிறப்பாக விளையாடியதால் மட்டுமே இவர் தேர்வானார்.இந்திய 'லெவன்' அணியில் விக்கெட் கீப்பர் இடத்துக்கு சஞ்சு சாம்சனை விட ரிஷாப் பன்ட்டிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். ஏனெனில் இடது கை பேட்டரான இவர், இத்தொடரில் சாதிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. கேப்டன் ரோகித், ஜெய்ஸ்வால் ஜோடி துவக்கம் தர வேண்டும். மூன்றாவது இடத்தில் கோலி களமிறங்கினால் நல்லது. சூர்யகுமாரை 4வது இடத்தில் களமிறக்கலாம். சமீபத்திய போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் ஷிவம் துபேக்கு 'லெவன்' அணியில் நிச்சயம் இடம் கிடைக்கும். நல்ல 'பார்மில்' உள்ள ரிங்கு சிங், சுப்மன் கில்லை மாற்று வீரராக தேர்வு செய்திருப்பது வருத்தம். வாய்ப்பு கிடைத்தால் சிறப்பாக செயல்படுவர்.இவ்வாறு யுவராஜ் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ