| ADDED : ஜூலை 23, 2024 11:17 PM
திருநெல்வேலி: டி.என்.பி.எல்., தொடரில் ஐந்தாவது வெற்றி பெற்றது கோவை அணி. நேற்று நடந்த லீக் போட்டியில் 43 ரன்னில் மதுரையை வென்றது. திருநெல்வேலியில் நேற்று நடந்த டி.என்.பி.எல்., லீக் போட்டியில் கோவை, மதுரை அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற மதுரை அணி பீல்டிங் தேர்வு செய்தது.கோவை அணிக்கு சுஜாய் (15), சுரேஷ் குமார் (16) ஜோடி துவக்கம் கொடுத்தது. முகிலேஷ் (21), சாய் சுதர்சன் (31) உதவினர். சிக்சர் மழை பொழிந்த கோவை அணி கேப்டன் ஷாருக்கான், 26 பந்தில் 51 ரன் (5 சிக்சர், 2 பவுண்டரி) எடுத்தார். கோவை அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 163 ரன் எடுத்தது. மதுரை சார்பில் அஜய் கிருஷ்ணா 4, மிதுன் 2 விக்கெட் சாய்த்தனர். மதுரை அணிக்கு சுரேஷ் (6), கேப்டன் ஹரி நிஷாந்த் (0) ஜோடி மோசமான துவக்கம் தந்தது. சதுர்வேத் (10), அபிஷேக் (1), சசிதேவ் (2), முருகன் அஷ்வின் (7) என யாரும் ஒற்றை இலக்க ரன்களை தாண்டவில்லை. ஜெகதீசன் கவுசிக் (27), மிதுன் (26), கார்த்திக் மணிகண்டன் (33) போராடிய போதும் வெற்றிக்கு போதவில்லை. மதுரை அணி 20 ஓவரில் 120 ரன் எடுத்து தோல்வியடைந்தது. கோவை சார்பில் கவுதம் 4, மணிமாறன் 2 விக்கெட் வீழ்த்தினர்.