| ADDED : மே 24, 2024 09:45 PM
ஹூஸ்டன்: இரண்டாவது 'டி-20' போட்டியில் 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அமெரிக்க அணி தொடரை 2-0 என கைப்பற்றியது.அமெரிக்கா சென்ற வங்கதேச அணி, மூன்று போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் அமெரிக்கா வென்றது. இரண்டாவது போட்டி ஹூஸ்டனில் நடந்தது. 'டாஸ்' வென்ற வங்கதேச அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.அமெரிக்க அணிக்கு ஸ்டீவன் டெய்லர் (31), கேப்டன் மோனக் படேல் (42), ஆரோன் ஜோன்ஸ் (35) கைகொடுக்க, 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 144 ரன் எடுத்தது.எட்டக்கூடிய இலக்கை விரட்டிய வங்கதேச அணிக்கு கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷான்டோ (36), தவ்ஹித் (25), சாகிப் அல் ஹசன் (30) ஆறுதல் தந்தனர். ஒரு விக்கெட் கைவசம் இருந்த நிலையில் கடைசி ஓவரில் வெற்றிக்கு 12 ரன் தேவைப்பட்டன. அலி கான் பந்துவீசினார். இரண்டாவது பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய ரிஷாத் (9), அடுத்த பந்தில் அவுட்டானார்.வங்கதேச அணி 19.3 ஓவரில் 138 ரன்னுக்கு 'ஆல்-அவுட்டாகி' தோல்வியடைந்தது. அமெரிக்கா சார்பில் அலி கான் 3 விக்கெட் சாய்த்தார். இதன்மூலம் அமெரிக்க அணி, ஐ.சி.சி., முழு உறுப்பினர் அந்தஸ்து பெற்ற அணிக்கு எதிராக முதன்முறையாக 'டி-20' தொடரை கைப்பற்றி வரலாறு படைத்தது.