| ADDED : ஜூலை 25, 2024 10:57 PM
தம்புலா: ஆசிய கோப்பை அரையிறுதியில் இன்று இந்தியா, வங்கதேசம் மோதுகின்றன.இலங்கையின் தம்புலாவில் பெண்களுக்கான ஆசிய கோப்பை ('டி-20') 9வது சீசன் நடக்கிறது. இன்று நடக்கும் முதல் அரையிறுதியில் 'நடப்பு சாம்பியன்' இந்திய அணி, வங்கதேசத்தை எதிர்கொள்கிறது.லீக் சுற்றில் பாகிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், நேபாளத்தை வீழ்த்தி 100 சதவீத வெற்றியுடன் அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா. பேட்டிங்கில் ஷபாலி வர்மா (158 ரன்) நம்பிக்கை தருகிறார்.ஸ்மிருதி மந்தனா, கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், ரிச்சா கோஷ், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹேமலதா எழுச்சி கண்டால் நல்ல ஸ்கோரை பெறலாம். 'சுழலில்' தீப்தி சர்மா (8 விக்கெட்) பலம் சேர்க்கிறார். இவருக்கு ராதா யாதவ் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். 'வேகத்தில்' ரேணுகா சிங் (4), பூஜா (3) கைகொடுத்தால் சுலப வெற்றி பெறலாம்.லீக் சுற்றில் இலங்கையிடம் தோற்ற வங்கதேச அணி, தாய்லாந்து, மலேசியாவை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது. பேட்டிங்கில் முர்ஷிதா (130 ரன்), கேப்டன் நிகர் சுல்தானா (110) கைகொடுக்கின்றனர். பவுலிங்கில் நஹிதா (5 விக்கெட்), ரபேயா கான் (5), ரிது மோனி (3) விக்கெட் வேட்டை நடத்தினால் இந்திய பேட்டர்களுக்கு நெருக்கடி தரலாம்.மற்றொரு அரையிறுதியில் இலங்கை, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.