பேயர்ன் முனிக் சாம்பியன்: ஜெர்மன் சூப்பர் கோப்பை கால்பந்தில்
பெர்லின்: ஜெர்மன் சூப்பர் கோப்பை கால்பந்து தொடரில் பேயர்ன் முனிக் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.ஜெர்மனியின் ஸ்டட்கர்ட் நகரில், ஜெர்மன் சூப்பர் கோப்பை கால்பந்து 16வது சீசனுக்கான பைனல் நடந்தது. இதில் ஸ்டட்கர்ட், பேயர்ன் முனிக் அணிகள் மோதின.துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய பேயர்ன் முனிக் அணிக்கு 18 வது நிமிடத்தில் ஹாரி கேன் ஒரு கோல் அடித்தார். இதற்கு ஸ்டட்கர்ட் அணியினரால் பதிலடி கொடுக்க முடியவில்லை. முதல் பாதி முடிவில் பேயர்ன் முனிக் 1-0 என முன்னிலையில் இருந்தது.இரண்டாவது பாதியிலும் அசத்திய பேயர்ன் முனிக் அணிக்கு 77வது நிமிடத்தில் லுாயிஸ் டியாஸ் ஒரு கோல் அடித்தார். தொடர்ந்து போராடிய ஸ்டட்கர்ட் அணிக்கு 'ஸ்டாப்பேஜ்' நேரத்தில் (90+3வது நிமிடம்) ஜேமி லெவெலிங் ஒரு கோல் அடித்து ஆறுதல் தந்தார்.ஆட்டநேர முடிவில் பேயர்ன் முனிக் அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று, 11வது முறையாக (1987, 1990, 2010, 2012, 2016-18, 2020-22, 2025) கோப்பை வென்றது. இத்தொடரில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற அணிகளுக்கான பட்டியலில் பேயர்ன் முனிக் முன்னிலை வகிக்கிறது. அடுத்த இடத்தில் போருசியா டார்ட்மண்ட் அணி (6 முறை) உள்ளது.