சிலருக்கு சைக்கிள் பயணம் சுகமானது. நீரஜ் சோப்ரா ரசிகர் ஒருவர், 22,000 கி.மீ., துாரம் சைக்கிளில் பயணித்து பாரிஸ் வந்தது வியக்க வைக்கிறது.ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் (ஆக.8) இந்தியாவின் நீரஜ் சோப்ரா மீண்டும் தங்கம் வெல்ல காத்திருக்கிறார். இவரது ரசிகரான கேரளாவை சேர்ந்த பாயிஸ் அஸ்ரப் அலி, 37, நீண்ட துார சைக்கிள் பயண சாகசத்தில் ஆர்வம் கொண்டவர். 2022, ஆக.15ல் உலக அமைதி, ஒற்றுமையை வலியுறுத்தி இந்தியா-லண்டன் சைக்கிள் பயணத்தை துவக்கினார். கோழிக்கோடு நகரில் இருந்து புறப்பட்டார். 17 நாடுகளை கடந்த இவர், 2023, ஆகஸ்டில் ஹங்கேரி தலைநகர் புடாபஸ்ட் வந்தார்.அங்கு உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க வந்திருந்த தனது 'ஹீரோ' நீரஜ் சோப்ராவை சந்தித்தார். சிறிது நேரம் பேசினார். அப்போது நீரஜ் சோப்ரா, ஒலிம்பிக் போட்டியை காண பாரிஸ் வரும்படி வலியுறுத்தியுள்ளார். உடனே தனது பயண திட்டத்தை மாற்றி, பிரிட்டனில் இருந்து பிரான்சிற்கு கிளம்பினார். 2 ஆண்டுகளில் 30 நாடுகளை கடந்து, 22,000 கி.மீ., துாரம் சைக்கிளில் சென்ற இவர், நேற்று பாரிசில் பயணத்தை நிறைவு செய்தார். பாயிஸ் அஸ்ரப் அலி கூறுகையில்,''நீரஜ் சோப்ராவை மீண்டும் சந்திக்க இருப்பதை நினைத்தால் மகிழ்ச்சியாக இருக்கிறது. இவரை சந்திக்க உதவும்படி இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி.உஷாவிடம் கேட்டுள்ளேன். இரண்டாவது தங்கம் வென்று வரலாறு படைப்பார். இவருக்கு பாரிஸ் அரங்கில் இருந்து உற்சாகம் அளிக்க தயாராக உள்ளேன்.இன்ஜினியராக பணியாற்றுகிறேன். முதன் முதலில் 2019ல் கோழிக்கோடு-சிங்கப்பூருக்கு சைக்கிளில் சென்றேன். 7 நாடுகளை கடந்து 8,000 கி.மீ., சைக்கிளில் பயணித்தேன். அந்த சைக்கிளின் விலை ரூ. 13 ஆயிரம். பாரிசிற்கு ரூ. 2.5 லட்சம் மதிப்பிலான சர்லி நிறுவன சைக்கிளில் வந்துள்ளேன். எனது இரண்டு உடை, டென்ட், சிறிய பாய் சேர்த்து சைக்கிளின் மொத்த எடை 50 கிலோ. சூரியன் உதித்ததும் சைக்கிள் பயணத்தை துவக்குவேன். தினமும் சராசரியாக 150 கி.மீ., பயணம் செய்வேன். உடல்ரீதியாக எந்த பாதிப்பும் ஏற்பட்டதில்லை. உலகம் முழுவதும் உள்ள மக்கள் எனக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கின்றனர். அவர்களது அன்பு எனக்கு ஊக்கம் அளிக்கிறது,''என்றார்.