புதுடில்லி: இந்தியன் தடகள சீரிஸ் பைனல் இன்று டில்லியில் நடக்கிறது. ஆசிய விளையாட்டுக்கு முன் இதில் இந்திய நட்சத்திரங்கள் சாதிக்க காத்திருக்கின்றனர்.இந்திய தடகள கூட்டமைப்பு சார்பில், இந்தியன் தடகள சீரிஸ் நடத்தப்படுகிறது. கடந்த ஏப்ரல் முதல் இதுவரை 15 சீரிஸ் நடந்தன. இதன் பைனல் இன்று டில்லியில் நடக்கிறது. மொத்தம் 30 பிரிவுகளில் போட்டிகள் நடக்கும். கடந்த 15 தொடரின், ஒவ்வொரு பிரிவிலும் சிறப்பாக செயல்பட்ட 'டாப்-8', 1500 மீ., 3000 மீ., ஸ்டீபிள் சேஸ் போட்டியில் 'டாப்-12' நட்சத்திரங்கள் மட்டும் இதில் பங்கேற்கின்றனர். முரளி ஸ்ரீசங்கர், தமிழகத்தின் 'டிரிபிள் ஜம்ப்' வீரர் பிரவீன் சித்ரவேல் உட்பட சிலரைத் தவிர, ஆசிய விளையாட்டு தடகள அணியில் இடம் பெற்ற பெரும்பாலான வீரர், வீராங்கனைகள் இன்று விளையாட உள்ளனர்.தடகளத்தில் ஜோதி (100 மீ., தடை ஓட்டம்), 400 மீ., ஓட்டத்தின் தேசிய சாதனையாளர், தமிழகத்தின் விஷால், குரிந்தர்விர் சிங் (100 மீ.,), அனிமேஷ் குஜுர் (200 மீ.,), காயத்தில் இருந்து மீண்ட அவினாஷ் சபிள், ஆன்சி சோஜன் (நீளம் தாண்டுதல்), யாஷ்விர் சிங் (ஈட்டி எறிதல்) உள்ளிட்டோர் சாதிக்க உள்ளனர்.ரூ. 1 லட்சம்இந்தியன் தடகள சீரிஸ் பைனல் மொத்த பரிசுத் தொகை ரூ. 65 லட்சம். முதலிடம் பெற்றால் ரூ. 1 லட்சம் பெறலாம். அடுத்த இரு இடம் பெறுபவர்கள் ரூ. 50,000, ரூ. 25,000 வழங்கப்படும். தவிர, 4, 5, 6வது இடம் பிடித்தால் ரூ. 20,000, ரூ. 15,000, ரூ. 10,000 தரப்படும்.