| ADDED : பிப் 13, 2024 10:30 PM
புதுடில்லி: ஆசிய சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற மல்யுத்த வீராங்கனை திவ்யா, ஊக்கமருந்து சோதனையில் சிக்கினார்.இந்திய மல்யுத்த வீராங்கனை திவ்யா காக்ரன் 25. ஆசிய சாம்பியன்ஷிப்பில் 2020, 2021 ல் தங்கம் உட்பட நான்கு பதக்கம் வென்றவர். காமன்வெல்த் சாம்பியன்ஷிப்பில் (2017) தங்கம் வென்ற இவர், காமன்வெல்த் விளையாட்டில் இரு வெண்கலம் (2018, 2022) கைப்பற்றினார். 2020 சிறந்த வீராங்கனைக்கான அர்ஜுனா விருது பெற்றார். வரும் பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்று இந்தியாவுக்கு எப்படியும் பதக்கம் வென்று திரும்புவார் என நம்பப்பட்டது. இவரிடம், தேசிய ஊக்கமருந்து தடுப்பு மையம் சார்பில் கடந்த டிசம்பர், 2023ல் முஜாபர் நகரில் உள்ள வீட்டில், போட்டியில்லாத நாளில் சோதனை நடந்தது. இதில் தடை செய்யப்பட்ட ஸ்டெராய்டு மெத்தில் டெஸ்டோஸ்டிரோன் என்ற மருந்து பயன்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து கடந்த ஜன. 10 முதல் போட்டிகளில் பங்கேற்க திவ்யாவுக்கு தற்காலி தடை விதிக்கப்பட்டது. அடுத்து தவறு செய்வது உறுதியாகும் பட்சத்தில் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க, இவருக்கு நான்கு ஆண்டு தடை விதிக்கப்படும் அபாயம் உள்ளது.