உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / பாரிஸ் பாராலிம்பிக்...இந்தியா ரெடி

பாரிஸ் பாராலிம்பிக்...இந்தியா ரெடி

புதுடில்லி:பாரிஸ் பாராலிம்பிக் போட்டிக்கு இந்திய நட்சத்திரங்களை வழியனுப்பும் விழா டில்லியில் நடந்தது.பிரான்ஸ் தலைநகர் பாரிசில், மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் 17வது சீசன் (ஆக. 28 - செப். 8) நடக்கவுள்ளது. இதில் இந்தியா சார்பில் 84 பேர், வில்வித்தை, தடகளம், பாட்மின்டன், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட 12 விளையாட்டுகளில் பங்கேற்கின்றனர். இந்திய பாராலிம்பிக் கமிட்டி (பி.சி.ஐ.,), இந்திய விளையாட்டு ஆணையம் ('சாய்') சார்பில் இவர்களை வழியனுப்பும் விழா டில்லியில் நடந்தது.இதில் பங்கேற்ற மத்திய விளையாட்டு துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறுகையில், ''நமது பாரா விளையாட்டு நட்சத்திரங்கள் தடைகளை தாண்டி, சாதிக்கும் திறமை பெற்றவர்கள். பாராலிம்பிக் போட்டியில் நிறைய பதக்கம் வெல்வர் என்று நம்புகிறேன்,'' என்றார்.டோக்கியோ பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் என 19 பதக்கம் கிடைத்தன. இம்முறை இதன் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து பி.சி.ஐ., தலைவர் தேவேந்திர ஜஜாரியா கூறுகையில், ''பாரிஸ் பாராலிம்பிக் போட்டிக்கு இந்திய நட்சத்திரங்கள் சிறப்பான முறையில் தயாராகி உள்ளனர். இவர்களின் கடின உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும்,'' என்றார்.

கொடி கவுரவம்

பாரிஸ் பாராலிம்பிக் போட்டிக்கான துவக்க விழா அணி வகுப்பில் இந்திய மூவர்ணக் கொடியை ஏந்தி வரும் கவுரவம், டோக்கியோ பாராலிம்பிக் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற சுமித் அன்டில், ஆசிய பாராலிம்பிக் விளையாட்டு குண்டு எறிதலில் வெள்ளி வென்ற பாக்யஸ்ரீ ஜாதவுக்கு வழங்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ