துப்பாக்கி சுடுதல்: மேகனா வெண்கலம்
நிங்போ: உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் மேகனா (10 மீ., 'ஏர் ரைபிள்') வெண்கலம் வென்றார்.சீனாவில், உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் ('ரைபிள்' / 'பிஸ்டல்') தொடர் நடந்தது. பெண்களுக்கான 10 மீ., 'ஏர் ரைபிள்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் மேகனா சஜ்ஜனார், 632.6 புள்ளிகளுடன் 7வது இடம் பிடித்து பைனலுக்கு முன்னேறினார். மற்ற இந்திய வீராங்கனைகளான ரமிதா (629.8 புள்ளி), காஷிகா பிரதன் (626.6) பைனல் வாய்ப்பை இழந்தனர்.அடுத்து நடந்த பைனலில் அசத்திய மேகனா, 230.0 புள்ளிகளுடன் 3வது இடம் பிடித்து வெண்கலம் வென்றார். இது, உலக கோப்பை வரலாற்றில் மேகனா கைப்பற்றிய முதல் பதக்கம் ஆனது. இது, இந்தியாவுக்கு கிடைத்த 2வது பதக்கம். ஏற்கனவே ஈஷா சிங் (10 மீ., 'ஏர் பிஸ்டல்') தங்கம் வென்றிருந்தார்.இம்முறை ஒரு தங்கம், ஒரு வெண்கலம் என, 2 பதக்கம் வென்ற இந்தியா, பதக்கப்பட்டியலில் 5வது இடத்தை கைப்பற்றியது. முதலிடத்தை சீனா (3 தங்கம், 4 வெள்ளி, ஒரு வெண்கலம்) தட்டிச் சென்றது.