சென்னை,:சோழிங்கநல்லுார் மண்டலம், 197வது வார்டு, அக்கரை, கலைஞர் கருணாநிதி சாலையில், 'மந்திரி சிக்னேச்சர் வில்லா' என்ற குடியிருப்பு உள்ளது. இங்கு, 40 குடும்பங்கள் உள்ளன. இங்கு, சிலர் நாய்கள் வளர்க்கின்றனர்.இதில் ஒரு நபரின் நாய், அங்கு வசிக்கும் ஐந்து பேரை கடித்துள்ளது. இதர வீட்டில் வளர்க்கும் நாய்களையும் கடித்துள்ளது. அங்குள்ள குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில், வெறி பிடித்து கடிக்கும் நாயை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என, மாநகராட்சிக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. சுகாதாரத்துறை அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி, நாய் வளர்க்கும் நபரை எச்சரித்து, வளர்ப்பது குறித்து உரிய ஆலோசனை வழங்கினர். ஆனால், மீண்டும் நேற்றும், அந்த நாயால் அங்கு வசிப்போர் பெரும் இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர். இதனால், வெறிபிடித்த நாயை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என, நலச்சங்கத்தினர் வலியுறுத்தினர்.இது குறித்து, மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:குடியிருப்பு வளாகத்தில் உள்ள ஒரு நாய் குறித்து புகார் வந்தது. வீட்டின் உரிமையாளரிடம் விசாரித்தோம். அங்குள்ள சிலரை கடித்தது தெரிந்தது. தடுப்பூசி போட்டு, குடும்ப கட்டுப்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்தினோம். முகமூடி அணிந்து, கயிறு கட்டி தான் வெளியே அழைத்து செல்ல வேண்டும் என, நாய் வளர்ப்பு குறித்து ஆலோசனை வழங்கினோம். மீண்டும், நாயால் தொல்லை வருவதாக புகார் வந்தது. விசாரணைக்கு பின், நாயை வெளியேற்ற வேண்டும் என உறுதியானால், உரிமையாளருக்கு ஏழு நாள் அவகாசத்தில் 'நோட்டீஸ்' வழங்கப்படும். அதற்குள் வெளியேற்றவில்லை என்றால், போலீஸ் பாதுகாப்புடன் பிரச்னைக்குரிய நாய், பிராணிகள் வளர்ப்பு அமைப்பிடம் ஒப்படைக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.